கடந்த 200 ஆண்டுகளில்.. ஒரே நாளில் பெய்த அதிபட்ச மழை எது தெரியுமா? தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த லிஸ்ட்
சென்னை: சென்னையை டிசம்பர் 4, 5 ஆம் தேதிகளில் பெய்த மழையால் சென்னையே தத்தளித்து வருகிறது. இரு தினங்களையும் சேர்த்து 638 மி.மீட்டர் மழை பெய்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பகிர்ந்த புள்ளி விவர பட்டியலில் கூறப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயலால் தமிழக வட கடலோர மாவட்டங்களில் பெரு மழை பெய்துள்ளது. குறிப்பாக தலைநகர் சென்னையை ஒட்டு மொத்தமாக புரட்டி போட்டு விட்டு சென்றது மழை.. ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில் பெய்த மழையால் சென்னை முழுக்கவே வெள்ளத்தில் தத்தளித்தது. அண்ணாசாலையில் கூட வெள்ளம் ஆறு போல பெருக்கெடுத்து ஓடியது.

பிரதான சாலைகளில் கூட முழங்கால் அளவுக்கு தண்ணீர் ஒடியது. தெருக்களில் எல்லாம் இடுப்பளவுக்கு தண்ணீர் ஓடியது. வெள்ள பாதிப்பால் கடந்த 2 தினங்களாக ஒட்டு மொத்த சென்னையே முடங்கி போனது. மழை விட்டதும் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டதால் படிப்படியாக இயல்பு நிலை வருகிறது. எனினும், சென்னையில் புற நகர் பகுதிகளில் இன்னும் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு வெள்ளம் சூழந்துள்ளது.
கடந்த 200 ஆண்டுகளில்: கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய மழையை அப்படியே மீண்டும் நினைவுபடுத்திவிட்டது இந்த ஆண்டு பெய்த பேய்மழை. சென்னை நுங்கம்பாக்கத்தில் டிசம்பர் 4 ஆம் தேதி 230 மி.மீட்டர் மழையும் 5 ஆம் தேதி மழையும் 238 மி.மீட்டர் மழையும் பெய்துள்ளது. சென்னையில் பெய்த இந்த பெருமழையே சென்னையை வெள்ளக்காடாக்க காரணமாகிவிட்டது.
இதனிடையே, சென்னையில் கடந்த 200 ஆண்டுகளில் ஒரே நாளில் பெய்த அதிபட்ச மழை பொழிவு குறித்த விவரங்களை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த தரவுகளின் படி, 1846 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 21 அம் தேதி 24 மணி நேரத்தில் 550 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.
468 மி.மீட்டர் மழை: இதற்கு அடுத்தபடியாக 1857 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 460 மி.மீட்டர் மழையும், 1976 ஆம் ஆண்டு 452 மி.மீட்டர் மழையும் பெய்துள்ளது. இந்த பட்டியலில் 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த மழை 12-வது இடத்தில் உள்ளது. டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி 294 மி.மீட்டர் மழை பெய்து இருக்கிறது.
இந்த ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி 238 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. பட்டியலில் இது 15- வது இடத்தில் உள்ளது. 4 ஆம் தேதி 230 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. இந்த இரு நாட்களையும் சேர்த்து 468 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. இவ்வளவு பெரிய மழையே சென்னை மிதக்க முக்கிய காரணமாக இருப்பது தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications