இன்னும் 5 நாள் வெயிட் பண்ணுங்க.. சென்னை வானிலை மையம் சொன்ன நல்ல செய்தி! மீனவர்களுக்கும் அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் 5 நாட்கள் வறண்ட வானிலை நிலவும் என்றும் ஜனவரி 31 ஆம் தேதி மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், 28 ஆம் தேதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து வெளியான அறிக்கையில், "தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று (ஜனவரி 25 ஆம் தேதி) மற்றும் ஜனவரி 26 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

ஜனவரி 27 ஆம் தேதி முதல் ஜனவரி 30 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஜனவரி 31 ஆம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும். வட தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும்.
உறை பனி எச்சரிக்கை: ஜனவரி 25 ஆம் தேதி தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு / அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்ப நிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்த பட்ச வெப்ப நிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): ஏதுமில்லை.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஜனவரி 28 ஆம் தேதி மற்றும் ஜனவரி 29 ஆம் தேதி குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications