6 செ.மீ. மழைக்கே கோவையில் வெள்ளம்.. தண்ணீரில் அடித்துச் சென்ற வாகனங்கள்.. காரணம் என்ன தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை மாவட்டத்தில் நேற்று மாலை பரவலாக பலத்த மழை வெளுத்துக் கட்டிய நிலையில், பல்வேறு பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில், பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் கார்கள் மற்றும் வேன் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பதைபதைப்பை ஏற்படுத்தியது. கோவையில் வெள்ளமா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். வெள்ளத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி முதல் துவங்கியுள்ளது. பருவமழை துவங்கியதில் இருந்தே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், சேலம், கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த வாரங்களில் அதி கனமழை பெய்தது. உள் தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது.

coimbatore rain

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தற்போது கர்நாட மாநிலத்தையொட்டி உள்ள பகுதிகள், கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, நீலகிரி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. முக்கியமாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. கோவை மாவட்டத்தில் நேற்று மாலையில் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக பல்வேறு பகுதிகளில் பலத்த மழை வெளுத்து வாங்கியது.

இதனால், பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழை நீர் தேங்கியதால் பொதுமக்கள் வாகனங்களை இயக்க முடியாமல் கடும் சிரமத்துக்குள்ளாகினர். கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் பெய்த பலத்த மழையில் குறிப்பாக பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக பாலமலை பகுதியில் மழை கொட்டித் தீர்த்தது. இந்த மலையில் இருந்து உற்பத்தியாகி, பெரியநாயக்கன்பாளையம், மத்தம்பாளையம், கோட்டைபிரிவு வழியாக செல்லும் ஏழெருமைப் பள்ளம் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

மத்தம்பாளையத்தில் இருந்து ஒன்னிபாளையம் வழியாக செல்லும் கோட்டைப் பிரிவு அருகே உள்ள சாலையில் ஓடையின் குறுக்கே தரைப் பாலம் உள்ளது. மழை காரணமாக தரைப்பாலத்தில் 4 அடிக்கும் மேல் தண்ணீர் சென்றது. அப்போது மின்தடை ஏற்பட்டதால் இருள்சூழ்ந்து காணப்பட்டது.
அந்த வழியாக இரண்டு கார்கள் கடக்க முயன்றன. இதில் அந்த 2 காரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. கார்களுக்குள் இருந்த 4 பேரும் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அவர்கள் சுதாரித்துக் கொண்டு காரில் இருந்து கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பள்ளத்தில் மழை நீரின் வேகம் அதிகரித்துக் காணப்பட்டதால் வாகனங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் காரில் இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர். இதனால், உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. ஆனால், அந்த கார்கள் பள்ளத்தில் அதிவேகத்தில் வந்த தண்ணீரில் சிக்கி கிட்டத்தட்ட 10 அடி தூரத்துக்கு அடித்துச் செல்லப்பட்டன.

இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பள்ளத்தின் இரண்டு புறத்திலும் கயிறுகளைக் கட்டி மேற்கொண்டு பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கடந்த ஆண்டு பெய்த பலத்த மழையின்போது இந்தப் பள்ளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. பொதுவாக கோவை மிகவும் தாழ்வாக உள்ள பகுதி என்பதால் பலத்த மழை பெய்தாலும் சில மணி நேரங்களிலேயே தண்ணீர் வடிந்துவிடும். சென்னையில் ஏற்படுவதுபோன்ற வெள்ள பாதிப்புகள் இங்கு ஏற்பட்டதில்லை. அந்த வகையில், கோவையில் சமீப காலமாக பெய்து வரும் மழையில் வெள்ளத்தில் வாகனங்களில் அடித்துச் செல்லப்படுவது, ரயில்வே பாலங்களில் பேருந்து மூழ்கியது போன்ற சம்பவங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வடகிழக்குப் பருவ மழை துவங்கியதில் இருந்தே பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள ஓடைகள், குளம், குட்டைகள், பள்ளங்களில் வெள்ளம் நிறைந்து காணப்படுகின்றன. இந்நிலையில், தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஓடைகள் வழியாக வரும் உபரிநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

மாவட்டத்தில் நேற்று பெய்த பலத்த மழையில் அதிகபட்சமாக கோவை தெற்கு தாலுகாவில் 70 மில்லி மீட்டர் மழையும், பீளமேடு ஏர்போர்ட் பகுதியில் 87.60 மில்லி மீட்டர் மழையும் பெய்தது. பெரியநாயக்கன்பாளையத்தில் நேற்று மாலை 6 முதல் 8 மணி வரை பலத்த மழை பெய்தது. கடந்த 24 மணி நேரத்தில் பெரியநாயக்கன் பகுதியில் 58.60 மில்லி மீட்டர் மழை பெய்தது. அதாவது 5.86 சென்டி மீட்டர் மட்டுமே மழை பெய்தது.

பெரியநாயக்கன்பாளையம், கோட்டை பிரிவு அருகே உள்ள பள்ளத்தை ஒட்டியே சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று பெய்த பலத்த மழை காரணமாக பள்ளத்தில் உபரிநீர் பெருக்கெடுத்ததால், அந்த சாலையே நீரில் மூழ்கியது. அச்சமயத்தில் அவ்வழியாக வந்த வாகனங்கள் சாலையைக் கடக்க முயன்றபோது நீரின் அதிவேகம் காரணமாக தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. தவிர பெருமழை எதுவும் அப்பகுதியில் பதிவாகவில்லை.

அதேபோல, காரமடை, மேட்டுப்பாளையம் பகுதியில் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த மழையால் அங்குள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. கோவை அருகே பேரூர், தொண்டாமுத்தூர், ஆலாந்துறை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை இடி- மின்னலுடன் கனமழை பெய்தது. புதுப்பாளையம் அருகே ஒருவரின் வீட்டின் பின்பக்கத்தில் உள்ள தென்னை மரத்தில் மின்னல் தாக்கியதில் அந்த மரம் தீப்பிடித்து எரிந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+