சில் சில் மழையே எங்கே இருந்தாய்.. சென்னையை குளிப்பாட்டிய மழை! அப்பறம் என்ன பஜ்ஜி, டீ.. ராஜா சார்..
சென்னை: சென்னையில் சிறிது இடைவேளைக்கு பிறகு பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காலநிலை நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல திருவள்ளூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது.
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கடந்த ஏப்ரல் மே மாதங்களில் கடும் வெயில் கொளுத்தி வந்தது பகல் நேரங்களில் அடுப்பை பற்ற வைத்தது போல சென்னை சூடாக இருந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

இதை அடுத்து மே மாதத்தின் நடுப்பகுதியில் கோடை மழை பெய்தது. நகரின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக குளிர்ச்சியான காலநிலை ஏற்பட்டது. அதே நேரத்தில் தொடர்ந்து மே இறுதிப் பகுதிகளில் மீண்டும் வெயில் அதிகரிக்க தொடங்கியது.
இந்த நிலையில் சென்னையில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. சொன்னது போலவே சென்னையில் இரவு நேரத்தில் பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
கடந்த சில வாரங்களுக்கு முன் மழை பெய்த நிலையில், சில நாட்களாக வெயில் அதிகரித்துக் காணப்பட்டது. இந்நிலையில் இன்று சென்னையின் பல பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது. இரவு சுமார் ஏழு மணிக்கு தொடங்கிய மழை 8 மணி வரை நீடித்தது. இடைவிடாமல் வெளுத்து வாங்கிய மழை காரணமாக சென்னை அண்ணா சாலை, கீழ்ப்பாக்கம், நுங்கம்பாக்கம், நந்தனம், அண்ணா நகர், வடபழனி, கிண்டி, சைதாப்பேட்டை, மீனம்பாக்கம், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
சென்னையின் புறநகர்ப் பகுதிகளான பூந்தமல்லி, திருவேற்காடு, அம்பத்தூர், ஆவடி, அனகாபுத்தூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி வெள்ளம் ஓடியது. மாலை நேரத்தில் வெயில் அடித்த நிலையில் இரவில் திடீரென பெய்த மழையால் வாகன ஓட்டிகள் கடும் இன்னலுக்கு ஆளாகினர்.












Click it and Unblock the Notifications