சென்னையில் பெங்களூர் கிளைமேட்! 7 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை!
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பரவலான மழையை பார்க்க முடிகிறது. இந்நிலையில், இன்று 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், "கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

அதிகபட்ச வெப்பநிலையாக திருப்பத்தூர் 37.8° செல்சியஸ் பதிவாகயிருக்கிறது. குறைந்தபட்ச வெப்பநிலையாக (சமவெளிப்பகுதிகளில்) கோயம்புத்தூர் (விமான நிலையம்) 20.6° செல்சியஸ் பதிவாகியிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 3-6° செல்சியஸ் உயர்ந்துள்ளது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் ஏதுமில்லை.
தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2-4 செல்சியஸ் குறைவாக இருந்தது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இருந்தது. வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 34-38° செல்சியஸ், தென் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 33-35° செல்சியஸ், தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 31-35° செல்சியஸ், மலைப் பகுதிகளில் 19-27° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
அடுத்த 7 நாட்களை பொறுத்த அளவில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக
நீலகிரி
கோயம்புத்தூர்
திருப்பூர்
ஈரோடு
தேனி
திண்டுக்கல்
தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
06-04-2025: தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
07-04-2025 முதல் 11-04-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை:
05-04-2025 மற்றும் 06-04-2025: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு. 07-04-2025 முதல் 09-04-2025 வரை: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.
இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாட்டை பொறுத்த அளவில், 05-04-2025 மற்றும் 06-04-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருக்கக்கூடும். 07-04-2025 முதல் 09-04-2025 வரை: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் வானிலை முன்னறிவிப்பு:
இன்று (05-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (06-04-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள் & அரபிக்கடல் பகுதிகள் ஆகியவற்றில் 05-04-2025 முதல் 09-04-2025 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை.
வங்கக்கடல் பகுதிகளில் இன்று எச்சரிக்கை ஏதுமில்லை. நாளை, அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
7ம் தேதி அந்தமான் கடல் பகுதிகள், அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
8ம் தேதி அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
9ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலின் வடக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அடுத்த 2 மணி நேரம்:
அடுத்த 2 மணி நேரத்தை பொறுத்த வரை 16 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நீலகிரி, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும், கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டிருக்கிறது.
மஞ்சள், ஆரஞ்சு அலர்ட் விளக்கம்: 64.5 மி.மீ முதல் 115. 5 மி.மீ வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டால், மஞ்சள் அலர்ட் விடுக்கப்படும். இதுவே, ஒரு நாளில் 115.6 முதல் 204.4 மிமீ வரையிலான மழைப்பொழிவுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படும். 24 மணி நேரத்தில் 204.5 மிமீக்கு அதிகமாக மழை பெய்யும் போது ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications