தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னையிலும் மழை கொட்டும்.. வானிலை அப்டேட்
சென்னை: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் எனவும், சென்னையில் மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது. குறிப்பாக இன்று மட்டும் கிருஷ்ணகிரி, சேலம், மதுரை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், கரூர், திண்டுக்கலில் கனமழை வெளுத்து வாங்கும் என வானிலை மையம் கூறியுள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நாளை கிருஷ்ணகிரி, தர்மபுரி, கோவை, சேலம், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

வளிமண்டல சுழற்சி
மேற்கு மத்தியப் பிரதேசம் முதல் தெற்கு உள் கர்நாடகம் வரை, மத்திய மகாராஷ்டிரா, மராத்த்வாடா மற்றும் வட உள் கர்நாடகம் வழியாக சுமார் 1.5 கிமீ உயரத்தில், ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. தெற்கு கடலோர ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதனைச் ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 3.1 கிமீ முதல் 5.8 கி மீ.உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
இதனால் இன்று கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்திலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.
நாளை 6 மாவட்டங்களில் கனமழை கொட்டும்
நாளை, நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்திலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான பெய்யக்கூடும்.
20 ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்திலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான பெய்யக்கூடும். 21 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான பெய்யக்கூடும்.
23 ஆம் தேதி வரை
22 ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்திலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான பெய்யக்கூடும். 23 ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்திலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான பெய்யக்கூடும்.
சென்னையில் மழைக்கு வாய்ப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (18-05-2026) மற்றும் நாளை (19-05-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை
இன்று முதல் 20 ஆம் தேதி வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் வரை குறையக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
18-05-2026 முதல் 19-05-2026 வரை: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
20-05-2026 வரை: தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
21-05-2026 முதல் 22-05-2026 வரை: தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்:
18-05-2026: அந்தமான் கடல் பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
19-05-2026: அந்தமான் கடல் பகுதிகள், தெற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்கண்ட நாட்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வலியுறுத்தப்படுகிறார்கள். என்று கூறப்பட்டுள்ளது.














Click it and Unblock the Notifications