சிவப்பு பூதம்.. பேயாட்டம் ஆடப் போகுது மழை! கோவை, நீலகிரிக்கு ரெட் அலர்ட்! இன்றைக்கு சம்பவம் உறுதி!
சென்னை: தமிழகத்தில் இன்று கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பருவமழை முன்னதாகவே தொடங்கி விட்ட நிலையில் அங்கெல்லாம் கனமழை பெய்து வருகிறது.
தமிழகத்திலும் கடந்த சில தினங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி, கோவை, தேனி, ஆகிய மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டிய மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் இன்று ஏழு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. குறிப்பாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் கன முதல் அதி கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியாகி உள்ள அறிவிப்பில்," இன்று (28.05.2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை ( 29.05.2025) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் தரைக்காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
தெற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகளிலும், மத்திய வங்கக்கடலின் ஒருசில பகுதிகளிலும் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், தெற்கு-மத்திய மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதிகள், ஆந்திர கடலோரப்பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில், சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
தென்மேற்கு மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், தென்கிழக்கு மத்தியகிழக்கு அரபிக்கடல், கொங்கன்- கோவா, கர்நாடக-கேரள கடலோரப்பகுதிகள், மாலத்தீவு மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்" என கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications