அதிகனமழை இருக்கு.. திருவாரூர் மாவட்ட மக்களே ரொம்ப கவனமாக இருங்க! அலர்ட் கொடுத்த தமிழக அரசு
திருவாரூர்: தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்து பெய்து வரும் நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்குமாறு தமிழக அரசின் பேரிடர் மேலாண்மை துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 16-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடக்கத்திலேயே மழை தனது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது. கடந்த 16-ம் தேதி முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக பலத்த மழை பெய்தது.

பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவியது. மேலும், தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வந்தது.
இதன் காரணமாக இன்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது இன்று காலை 8.30 மணி நிலவரப்படி தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை பிற்பகலில் ஆந்திரக் கடற்கரைகளுக்கு அப்பால் தென்மேற்கு மற்றும் மேற்கு மத்திய வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அதன்பிறகு அது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரக் கடற்கரை பகுதிகளை நோக்கி அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரம் அடைய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயலாக மாறுமா என்பது நாளைத்தான் தெரியும் என்றும், வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா கூறியுள்ளார். வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு காரணமாக இன்று 8 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழைக்கான அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. இதற்கிடையில், திருவாரூர் மாவட்டத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்குமாறு தமிழக அரசின் பேரிடர் மேலாண்மை துறை அறிவுறுத்தியுள்ளது.
முன்னதாக, இன்று காலை மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்துக்கு நேரில் சென்று, மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆய்வு செய்தார்.
அப்போது, ஆயத்த நிலை மற்றும் மீட்புப் பணிகளை விரைவுபடுத்தவும், கரையோரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லவும் மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்காக முகாம்களைத் தயார் நிலையில் வைத்திருக்கவும், முகாம்களில் மக்களுக்கு வழங்க வேண்டிய உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications