சென்னைக்கு அருகே கொட்டப்போகும் கனமழை! வட மாவட்டங்களுக்கு.. வானிலை மையம் கொடுத்த ஜில் அப்டேட்
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், இன்று தொடங்கி செப்.19ம் தேதி வரை வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், இன்று திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இது குறித்து விடுக்கப்பட்டிருந்த அறிவிப்பில், "நேற்று (12-09-2025) வடக்கு ஆந்திர தெற்கு ஒரிசா கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (13-09-2025) காலை 0830 மணி அளவில் மத்தியமேற்கு, அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல், வடக்கு ஆந்திர தெற்கு ஒரிசா கடலோரப்பகுதிகளில் நிலவுகிறது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு சத்திஸ்கர் பகுதிகளில் அடுத்த இரு தினங்களில் கடந்து செல்லக்கூடும்.

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், இராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
செப்.15ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
செப்.16ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
செப்.17ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
செப்.18ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
செப்.19ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கை பொறுத்தவரை, இன்றும் நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.
செப்.15 முதல் 17 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. எனினும், ஒருசில இடங்களில் சற்று குறையக்கூடும்.
இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:
இன்று முதல் செப்.17 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், அதிகபட்ச வெப்பநிலை 2-3* செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று (13-09-2025): வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (14-09-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications