"ஆட்டம் காட்டும் இரட்டையர்கள்.." அடுத்த 10 நாள் மழை வெளுக்கும்! உஷாரா இருக்கணும்.. வெதர்மேன் அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் இந்தாண்டு மே மாதம் வழக்கத்திற்கு மாறாக மழை அதிகம் பெய்தது. சென்னை உட்பட மாநிலம் முழுக்க பரவலாக மழை பெய்தது. இதனால் கோடையின் தாக்கமே குறைவாக இருந்தது. இதற்கிடையே அடுத்த 10 நாட்களுக்குத் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வழக்கமாக மே மாதம் கோடை வெப்பம் தான் உச்சத்தில் இருக்கும். ஆனால், இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக மழை தான் கொட்டியது. குறிப்பாக அக்னி நட்சத்திரம் ஆரம்பித்த பிறகு மழை அதிகரிக்கவே செய்தது. மாநிலத்தில் பெரும்பாலான இடங்களிலும் மழை பெய்த நிலையில், கோடை வெப்பம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

தமிழ்நாடு வெதர்மேன்
இதற்கிடையே பருவமழையும் இப்போது முன்கூட்டியே தொடங்கியுள்ளது. இதனால் மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் அடுத்த 10 நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் இதனால் மக்கள் அதற்கேற்ப தங்கள் திட்டங்களை அமைத்துக் கொள்ளுமாறு தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
ஆட்டம் காட்டும் இரட்டையர்கள்
இது தொடர்பாக வெதர்மேன் தனது ட்விட்டரில், "இரட்டையர்கள் ஆட்டும் காட்டுகிறார்கள்..ஒரு பக்கம் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது. மற்றொரு பக்கம் மேற்கு கடற்கரை / மேற்கு தொடர்ச்சி மலைகளில் மிகக் கனமழை பெய்து வருகிறது.. எனவே, உங்கள் விடுமுறையைப் பாதுகாப்பாகத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.. அதிக மழை பெய்யும் பகுதிகளுக்குப் பயணிப்பதைத் தவிர்க்கவும்.
எங்கே மழை
கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு (கோவை- வால்பாறை, நீலகிரி - கூடலூர், கன்னியாகுமரி) பகுதிகளில் நாளை மே 23 முதல் ஜூன் 3 வரை 10 நாட்களுக்கு மிகக் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் ஒரே நாளில் 200 மிமீ (அதீத மழை) பெய்யக்கூடும். பொதுவாகப் பருவமழை இதுபோல அதிகரிப்பது ஜூன் மாதத்தில் தான் நடக்கும். ஆனால் இந்த இரட்டை அமைப்புகள் (அரபியக் கடலில் ஒன்று, வங்காள விரி குடாவில் ஒன்று) இருப்பதால், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அதிக மழை பெய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது.
சரியாக திட்டமிடுங்கள்
இது விடுமுறைக் காலம்.. அதிக மழை பெய்த பிறகு மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள சுற்றுலா தலங்களுக்குப் பயணிக்கும்போது சுற்றுலாப் பயணிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்.
இடுக்கி, குடகு, நீலகிரியில் உள்ள கூடலூர்-அவலாஞ்சி பகுதி, வால்பாறை, சிக்மகளூர் மலைகள், கர்நாடக கடலோரப் பகுதிகள், உடுப்பி, ஷிமோகா மலைகள், உத்தர கன்னடம், வடக்கு கடற்கரை கேரளா போன்ற இடங்கள் அதிக ஆபத்தில் உள்ளன. கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, சிறுமலை, கொல்லிமலை, மேகமலை ஆகியவை சுற்றுலாப் பயணிகள் செல்ல பாதுகாப்பானவையாக இருக்கிறது.
சென்னை கிளைமேட்
மேற்கு கடற்கரை / மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பருவமழை அதிகரித்துள்ள நிலையில், சென்னையில் மழை கொஞ்சம் பிரேக் எடுக்கும். தமிழ்நாட்டின் பிற உள் மாவட்டங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மழை பெய்யும். பெங்களூரில் நிலவிய மேலடுக்கு சுழற்சி மறைந்துவிட்டது. இதனால் மேற்குப் பக்கத்திலிருந்து மேகங்களுடன் லேசான பருவமழை பெய்யும்" என்று தெரிவித்துள்ளார். மேலும், இப்போது மழை மேகங்கள், காற்றின் மூவ்மெண்ட் எப்படி இருக்கிறது என்பது குறித்த போட்டோக்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.












Click it and Unblock the Notifications