வேகமெடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. கொட்ட போகுது மழை.. இன்று எங்கெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை?
சென்னை: வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக உருவாகிறது... இதையொட்டி கனமழை காரணமாக 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் பிறப்பித்துள்ளனர்.
சமீப நாட்களாகவே, தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக நேற்று முன்தினம் வலுப்பெற்றது.

தீவிர காற்றழுத்தம்: இதையடுத்து, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அது வலுவடைந்து தெற்கு இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இன்று அதிகாலை 1 மணி நிலவரப்படி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகரும் வேகம் அதிகரித்துள்ளது. அதன்படி, 8 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில், தற்போது மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று புயலாக உருவாகும் என்றும், இது இன்று புயலாக மாறியபின் நாளை நள்ளிரவு அல்லது நாளை மறுநாள் தமிழக கடலோர பகுதிகளை நெருங்கும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.
கனமழை: இதன் காரணமாக, இன்று கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சில இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 மாவட்டங்களில் அதிகனமழைக்கான "ரெட் அலர்ட்" எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த புயலுக்கு "பெங்கல்" என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.. இந்த கனமழை, புயல் எச்சரிக்கையை தொடர்ந்து தமிழகத்தின் சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று புதன்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இன்று விடுமுறை: கடலூர், மயிலாடுதுறை , நாகப்பட்டினம், திருவாரூர், விழுப்புரம், திருவள்ளூர், தஞ்சாவூர், திருச்சி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. அதேபோல, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று புதன்கிழமை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கனமழை பெய்யும் என்று ஏற்கனவே வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், 25 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல, நீலகிரி, கோயம்புத்தூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, தென்காசி, விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications