நெல்லை டூ ஓசூர் வரை திடீரென வெளுத்து கட்டிய மழை! ஜில்லென மாறிய கிளைமேட்.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
நெல்லை: நெல்லை டூ ஓசூர் வரை இன்று மழை விட்டு விளாசியுள்ளது. ஒரு வழியாக மழை பெஞ்சுடுச்சுப்பா என்று மக்கள் பெருமூச்சு விடும் வகையில் நெல்லை, தென்காசியில் இன்று பிற்பகலில் கனமழை வெளுத்து வாங்கியது. நெல்லை திசையன்விளை பகுதியில் ஆரம்பித்த மழை சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம், பாபநாசம், இடைகால் மற்றும் தென்காசி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் என இன்று கனமழை வெளுத்து வாங்கியது. இரண்டு வாரங்களுக்கு மேல் அடித்த வெயிலால் பாலைவன பூமி போல் தகித்த நெல்லை, தென்காசி மாவட்டம் இன்று பெய்த மழையினால் அப்படியே குளிர்ந்து போனதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நெல்லை, தென்காசி மட்டும் இன்றி தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று பிற்பகல் முதல் இரவு வரை மழை வெளுத்து வாங்கியது. மதுரை, திருச்சி, சிவகங்கை, திண்டுக்கல், கோவை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, பெரம்பலூர் என பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது.
வாகன ஓட்டிகள் அவதி
நீண்ட நேரம் ஆகியும் தண்ணீர் வடியாததால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பெய்த கனமழையால் அப்பகுதி சாலைகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். கடந்த சில நாட்களாகவே வெயில் வாட்டி வந்த நிலையில் இன்று பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் செப்டம்பர் மாதத்தில் இதுவரை இல்லாத அளவு வெயில் வாட்டி வதைத்தது. சுட்டெரிக்கும் வெயிலால் தகித்த மக்கள் நெல்லை, தென்காசி பாலைவனமாக ஆகிவிட்டதா என்று சொல்லும் அளவுக்கு வெயில் வாட்டி வதைத்தது. சுமார் 105.3 டிகிரி செல்சியஸ் வரை வெயில் சுட்டெரித்தது. இதனால் பேனை போட்டால் கூட காற்று வரவில்லை அனல் தான் வருகிறது என இன்ஸ்டாகிராமிலும் பலர் ரீல்ஸ் போடும்படியாக வெயில் சுட்டெரித்து வந்தது.

ஒரு மணி நேரம் விட்டு விளாசிய மழை
நெல்லை, தென்காசியில் கடந்த இரு வாரங்களாக இப்படித்தான் நிலமை இருப்பதாக பலரும் வீடியோ வெளியிட்டு வந்தனர். எப்போது தான் மழை பெய்யும், இல்லையெனில் வெயில் குறையும் என எதிர்பார்த்த மக்களுக்கு இன்று பிற்பகல், அப்பாடா ஒருவழியாக மழை பெய்துவிட்டது என்று பெருமூச்சு விடும் வகையில் மழை விட்டு விளாசியது. மன்னார் வளைகுடா பகுதியில் காற்றழுத்த சுழற்சி காரணமாக இன்று பிற்பகலில் மழை விட்டு விளாசியது.
நெல்லை மாநகரப் பகுதியில் மதியத்தில் இருந்தே கருமேகம் திரண்டு அப்படியே இருட்டானது. இடி, மின்னலுடன் சட்டென மழை பெய்யத் தொடங்கியது. காற்றும் பலமாக வீசியது. நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதே போன்று தென்காசி மாவட்டம் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருசில இடங்களில் மழை விட்டு விளாசியது. நெல்லையில் சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம், பாபநாசம், முக்கூடல், இடைகால், தென்காசியில் ஆலங்குளம், ஆழ்வார்குறிச்சி, கடையம், பாப்பான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் இடைவிடாமல் மழை விட்டு விளாசியது.
மக்கள் மகிழ்ச்சி
பின்னர் அவ்வப்போது லேசான மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. நீண்ட நாட்களுக்கு பிறகு பெய்த மழையினால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இரண்டு வாரங்களுக்கு மேல் அடித்த வெயிலால் தகித்த நெல்லை, தென்காசி மாவட்டம் இன்று பெய்த மழையினால் அப்படியே குளிர்ந்து போயுள்ளது.
தென் மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று மழை பெய்துள்ளது. விருதுநகர், மதுரை, வேலூர், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்துள்ளது. கோவையில் நேற்று இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காலநிலை நிலவியது. இடி, மின்னலுடன் பெய்த மழையால் நெல்லை மாவட்டத்தில் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்த சோகமும் நடைபெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications
