திருப்பத்தூர், குமரியை வெளுத்து எடுத்த கனமழை.. இன்று 9 மாவட்டங்களுக்கு அலர்ட்! வானிலை மையம் வார்னிங்
சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் திருப்பத்தூர், கன்னியாகுமரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து எடுத்திருக்கிறது. இந்நிலையில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த அக்.1ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. தற்போது பருவமழை தீவிரமடைந்துள்ளது. நேற்று இரவு வடமாவட்டமான திருப்பத்தூரிலும், கொங்கு மாவட்டமான கோவையிலும், தென் மாவட்டமான கன்னியாகுமரியிலும் அதிக அளவில் மழை பொழிந்திருக்கிறது. இதன் காரணமாக கோவை மற்றும் குமரியில் நேற்று சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியிருக்கிறது. இந்நிலையில் இன்று கனமழைக்கான மாவட்டங்கள் குறித்த அறிவிப்பை வானிலை மையம் வெளியிட்டிருக்கிறது.

அதன்படி, "இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 26.10.2024 முதல் 29.10.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: 25ம் தேதி வரை மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 70 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும். மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று பிற்பகல் வரை மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்.
வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள்: இன்று இரவு வரை மணிக்கு 70 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்திலும், இன்று மாலை தொடங்கி 25ம் தேதி காலை வரை மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்.
வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள்: நாளை காலை வரை மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 7 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications