நீலகிரிக்கு ஆரஞ்சு அலர்ட்.. கோவை, தேனி உள்பட 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என எச்சரிக்கை
கோவை: நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த 3 நாட்களில் அவலாஞ்சியில் 91 செ.மீ. மழைப்பொழிந்திருப்பதாக வானிலை ஆய்வு மையத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
தென்மேற்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரம் அடைந்துள்ளதால், பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது . குறிப்பாக கேரள எல்லையை ஒட்டிய நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் கன மழை வெளுத்து வாங்குகிறது. நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் கடந்த 3 நாட்களில் மட்டும் 91 செ.மீ. மழை கொட்டியிருக்கிறது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் பெய்த மழையால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கூடலூரில் இருந்து மைசூரு மற்றும் கேரளா பகுதிகளுக்கு செல்லும் சாலைகளில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்திருக்கிறது. இதனால் போக்குவரத்து அங்கு பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மரக்கிளைகள் முறிந்து விழுவதால் ஓவேலி, தேவர்சோலை சுற்று வட்டாரத்தில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் வினியோகம் அடியோடு துண்டிக்கப்பட்டிருக்கிறது.
நீலகிரி மாவட்டத்தை போல் கோவை மாவட்டத்திலும் கனமழை பெய்து வருவதால் குளங்கள் தடுப்பணைகள் நிரம்பி வழிகின்றன.சிறுவாணி மலை அடிவாரத்தில் கனமழை பெய்வதால் கோவை குற்றால அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. அருவி இருக்கும் இடமே தெரியாத அளவுக்கு வெள்ளம் பாய்ந்து ஓடுகிறது. இதனால் கோவை குற்றாலம் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி இல்லை.
கோவை மாநகரை பொறுத்தவரை நொய்யல் ஆற்றுக்கு தண்ணீர் வரத்து கிடுகிடுவென அதிகரித்தது. நொய்யல் ஆற்றுக்கு தண்ணீர் வரும் முக்கிய ஆறான சின்னாறு மற்றும் வைதேகி அருவி ஓடை, உரிப்பள்ளம் ஓடை, நரசீபுரம் ஓடை உள்ளிட்ட ஓடைகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. பேரூர் பெரியகுளம், சொட்டை யாண்டி குளம், கங்கநாராயண சமுத்திரம், வேடப்பட்டி குளம், கோளராம்பதி, நரசாம்பதி, குறிச்சி போன்ற குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. கடந்த 2 நாட்களில் கோவை , நீலகிரி மாவட்டத்தை கனமழை புரட்டி போட்டுள்ளது.
இந்நிலையில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், "மத்திய மேற்கு மற்றும் அதனையொட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவாகியுள்ளது. இது மேலும் வலுப்பெற்று ஒடிசா கடற்கரையை நோக்கி 2 நாட்களில் நகரக்கூடும்.
இதனால் தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்பு குறைவு என்றாலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்றும் (வெள்ளிக்கிழமை) நீலகிரி மாவட்டத்தில் கன முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்திற்கு மீண்டும் 'ஆரஞ்சு’ எச்சரிக்கை நிர்வாக ரீதியாக வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும், தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தனது அறிவிப்பில் கூறியுள்ளது. நாளை (சனிக் கிழமை) முதல் 24-ந்தேதி (புதன்கிழமை) வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில், அவலாஞ்சியில் 20 செ.மீ., சின்னக்கல்லார் 15 செ.மீ., எமரால்டு, வால்பாறை தலா 12 செ.மீ., மேல்பவானி 11 செ.மீ., சோலையார், சின்கோனா தலா 10 செ.மீ., பந்தலூர் 8 செ.மீ., கூடலூர் பஜார், தேவாலா தலா 7 செ.மீ. நடுவட்டம், பார்வூட், செருமுள்ளி தலா 6 செ.மீ. உள்பட சில இடங்களில் கன மழை பெய்திருக்கிறது.












Click it and Unblock the Notifications