இந்தா ஆரம்பிச்சிடுச்சுல்ல.. சென்னையில் பலத்த காற்றுடன் வெளுத்து வாங்கும் மழை.. நள்ளிரவிலும் சம்பவம்!
சென்னை: சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வேளச்சேரி, ஆலந்தூர் பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ள சூழலில், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று இரவு 1 மணிக்குள் சென்னை உட்பட 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, சென்னையில் பலத்த காற்றுடன் மழை வெளுத்து வாங்கி வருகிறது. பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, எம்.ஆர்.சி நகர், சாந்தோம் திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

மேலும், வேளச்சேரி, ஆலந்தூர், ஆதம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. சோழிங்கநல்லூர், சேலையூர், தாம்பரம், மேடவாக்கம், பெரும்பாக்கம், கிழக்கு கடற்கரை சாலை, ஓ.எம்.ஆர் சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. சென்னை நகர் மட்டுமின்றி புறநகர்ப் பகுதிகளிலும் பல்வேறு இடங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தற்போது அதே இடத்தில் நிலவுவதாக கூறப்பட்டது. அதன் காரணமாக, அடுத்த 24 மணிநேரத்தில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், அது வரவிருக்கும் 2 நாட்களில் தமிழகம் மற்றும் இலங்கை கடலோர பகுதிகளை நோக்கி நகரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று மாலை அறிவித்தது. இந்த தாழ்வுப்பகுதி வரும் 2 நாட்களில் தமிழகம் நோக்கி நகரும். இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியின் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களிலும், கன்னியாகுமரி வரை உள்ள கடலோர மாவட்டங்களிலும் நவம்பர் 15ம் தேதி வரை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில், "நவம்பர் 12-17 வரை மழையின் தீவிர நிலை, இதில் (சென்னை) நவம்பர் 12 முதல்16 வரை இடைவேளையுடன் தினசரி மழையைப் பெறும். அதோடு, தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் இன்று இரவு அல்லது நாளை காலை முதல் 5-வது கட்ட பருவமழை தொடங்கும். நாளை, நவம்பர் 12ஆம் தேதி சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது." எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications