ஹைதராபாத்தில் கனமழை.. சாலையில் சென்றவர் பைக்கோடு வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்ட காட்சி
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இன்று அதிகாலை பெய்த கனமழையால் சாலைகளில் பல இடங்களில் வாகனங்களே செல்ல முடியாத அளவிற்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதையும் மீறி வாகனத்தில் வெள்ளத்தில் எதிர்த்தபடி சாலையில் சென்றவர் பைக்கோடு வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்ட காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோ காட்சியில், சாலையில் சென்றவரை வெள்ள நீர் அடித்து செல்கிறது.
இன்று அதிகாலையில், ஹைதராபாத்தில் திடீரென பெய்த கனமழையால் நகரின் பல பகுதிகள் நீரில் மூழ்கியது. இதனால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டதுடன், கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இந்நிலையில் ஹைதராபாத்தின் ராம் நகரில் 40 வயது நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் வெள்ளம் வேகமாக சென்று கொண்டிருந்தது. அவர் எதிர்பாராதவிதமாக வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டார். அவர் வாகனத்துடன் வெள்ள நீரில் இழுத்துச் செல்லப்பட்டதை பார்த்த இரண்டு பேர் ஓடிச் சென்று காப்பாற்ற முயன்றனர். ஆனால் காப்பாற்ற முடியவில்லை.. அவர்களையும் வெள்ளம் இழுக்க முயன்றது. இதில் அந்த 40 வயது நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து ஹைதராபாத் போக்குவரத்து போலீசார் தண்ணீர் வெள்ளமாக பாய்ந்தோடுவது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். தண்ணீர் தேங்கியுள்ள சாலைகள் குறித்து எச்சரித்துள்ளதுடன், மாற்று வழிகளில் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்கள். திடீர் மழையால் நிலைமை மோசமாகி, கடுமையான நீர் தேங்கி ஹைதராபாத் நகர் முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது

தெலுங்கானா மாநிலத்தின் தினசரி வானிலை அறிக்கையில், இன்று காலை 8:30 மணிக்கு வெளியிடப்பட்ட மழை நிலவரத்தின் படி, யாதாத்ரி புவனகிரி கனமழை பெய்திருந்தது. ஹைதராபாத் பல பகுதிகளில் கனமழை பெய்திருந்தது. அதேபோல் மேட்சல் மல்காஜ்கிரி, வனபர்த்தி, ஹனுமகொண்டா, கம்மம், மகபூப்நகர், நாகர்கர்னூல், நல்கொண்டா, நிஜாமாபாத், ரங்காரெட்டி மற்றும் சித்திப்பேட்டை போன்ற மாவட்டங்களிலும் கணிசமான அளவு மழை பெய்தது. அதிகபட்சமாக தெலுங்கானாவில் யாதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் உள்ள யாதகிரிகுட்டாவில் 17 செ.மீ மழை பெய்திருந்தது. நாராயண்பேட்டை மாவட்டம் மத்தூரில் 14 செ.மீ மழையும் பதிவாகி இருந்தது.
ஐதராபாத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் சாலையில் சென்றவர் பைக்கோடு வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்ட காட்சி #Hyderabad #Flood pic.twitter.com/OpYeuNWEip
— velmurugan (@velmurugantheni) August 20, 2024
ஐதராபாத்தில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், தெலுங்கானாவின் பல மாவட்டங்களில் ஆகஸ்ட் 21 ஆம் தேதி காலை 8:30 மணி வரை பலத்த மழை பெய்யக்கூடும் என்று எச்சரித்துள்ளது. ஹைதராபாத்தில் நல்கொண்டா எக்ஸ் ரோடு மற்றும் சாதர்காட் எக்ஸ் ரோடு பகுதியில் இன்று காலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதேபோல் ஆம்பர்பேட்டை மேம்பாலம் கட்டுமானப் பணியின் காரணமாக அங்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications