வறண்ட வானிலை + பனி மூட்டம்.. வாட்டி எடுக்கப்போகும் வெயில்! வட மாவட்டங்களுக்கு வானிலை மையம் வார்னிங்
சென்னை: மழையெல்லாம் முடிந்து தற்போது வெயில் மண்டையை பிளக்க தொடங்கியிருக்கிறது. டெல்டா மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் அடுத்த ஒரு வாரத்திற்கு வானிலை எப்படி இருக்கும்? என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிவிப்பின்படி, அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகம் முழுவதும் வறண்ட வானிலையும், வட மாவட்டங்களில் பனி மூட்டமும் நிலவும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இன்றும் நாளையும் வானிலை
இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில், "குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே, இன்றும் நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
குறிப்பாக தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும். அதேபோல, ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர் மாவட்டங்களில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
அடுத்த ஒரு வாரம்
பிப்.1ம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும். ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர் மாவட்டங்களில் அதிகாலை வேளையில் ஒரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
மழைக்கான வாய்ப்பு
பிப்.2ம் தேதி ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். பிப்.3ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். பிப்.4 மற்றும் 5ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
குறைந்தபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
24 மணி நேர குறைந்தபட்ச வெப்பநிலை மாறுதலை பொறுத்தவரை, இன்று முதல் பிப்.1 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு.
பிப்.2 மற்றும் 3ம் தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 1-2° செல்சியஸ் வரை சற்று உயரக்கூடும்.
இயல்பு நிலையிலிருந்து குறைந்தபட்ச வெப்ப அளவின் வேறுபாட்டை பொறுத்தவரை, இன்று தொடங்கி, பிப்.3 வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 20-21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 20-21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications