சுட்டெரிக்கும் சூரியன்.. ஈரோடு ரொம்பவே மோசம்.. இன்றும் அதிக வெப்பம் பதிவு.. எவ்வளவு தெரியுமா? ஷாக்
ஈரோடு: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தீவிரம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஈரோட்டில் அதிகபட்சமாக வெயில் பதிவாகியுள்ளது. ஈரோட்டை தொடர்ந்து வேலூர் மற்றும் சேலத்திலும் வெயில் அதிக அளவு பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் வழக்கமாக மார்ச் இறுதியில்தான் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி இறுதியிலேயே வெயில் தொடங்கிவிட்டது. மார்ச் முழுவதும் வெயில் கொழுந்துவிட்டு எரிந்த நிலையில், ஏப்ரல் தொடக்கத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. கன்னியாகுமரி, நெல்லை, தேனி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இருப்பினும் வெயிலின் தாக்கம் தீவிரமாகதான் இருக்கிறது.

இந்நிலையில் நேற்று நாடு முழுவதும் பதிவான வெயிலின் அளவு குறித்து இந்திய வானிலை மையம் அறிவிப்பை வெளியிட்டிருந்து. அதன்படி நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை பதிவான பகுதிகளில் சேலம் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது.
ஆந்திராவின் அனந்தப்பூர் 110.3 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்துடன் முதல் இடத்திலும், ஒடிசாவின் பரலாகிமுண்டி 109.04 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்துடன் இரண்டாவது இடத்திலும் இருந்தன. சேலத்தில் 108.14 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியிருந்து. எனவே கடந்த 24 மணி நேரத்தில் தேசிய அளவில் அதிக அளவு வெயில் பதிவான பகுதியாக சேலம் மூன்றாவது இடத்தை பிடித்தது.
நாடு முழுவதும் நாளுக்கு நாள் வெப்ப அலை தீவிரமடைந்து வருவதால், வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து வருகிறது. எனவே மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அதிக அளவில் தண்ணீர், நீர் சத்து கொண்ட பழங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் இன்று தமிழகத்தில் பதிவான வெயில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ஈரோட்டில் இன்று 107.6 டிகிரி ஃபரான்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. ஈரோட்டை தொடர்ந்து, வேலூரில் 106.88 டிகிரியும், சேலத்தில் 105.98 டிகிரியும் வெயில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
முன்னதாக இன்று மதியம் வெளியாகியிருந்த வானிலை அறிவிப்பில், இன்று தொடங்கி அடுத்த 6 நாட்களை பொறுத்த அளவில், வறண்ட வானிலையே நிலவும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இன்றும் நாளையும், தென் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும். ஏப்.26 தொடங்கி ஏப்.30 வரை தமிழகம் காரைக்காலில் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மட்டுமல்லாது இன்றும் நாளையும் வட உள் தமிழகத்தில் வெப்ப அலை வீசும் என்று வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கையை கொடுத்திருக்கிறது. அதேபோல இன்று தொடங்கி ஏப்.28ம் தேதி வரை தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications