தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில்.. 3 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை! ஆரஞ்சு + மஞ்சள் அலர்ட்
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாகவே வெயில் பட்டையை கிளப்பி வருகிறது. இதனால் மக்கள் மதிய நேரங்களில் வெளியில் போவதை முழுமையாக தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், "தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால் இன்றும் நாளையும் தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஏப்.16 முதல் 18ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பை பொறுத்த அளவில், இன்று தொடங்கி 16ம் தேதி வரை அடுத்த இரண்டு தினங்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. அதற்கு அடுத்து வரும் மூன்று தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும்.
இன்றும் நாளையும், அடுத்த இரண்டு தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை வட தமிழகத்தில் ஒருசில இடங்களில் 2° - 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும். தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 37°-40° செல்சியஸ் மற்றும் கடலோரப்பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் 33°-37° செல்சியஸ் இருக்கக்கூடும்.
இன்று முதல் 16ம் தேதி வரை, அதற்கு அடுத்து வரும் மூன்று தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை பெரும்பாலான இடங்களில் 2° - 4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 38°-41° செல்சியஸ் மற்றும் கடலோரப்பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் 34°-38° செல்சியஸ் இருக்கக்கூடும்.
இன்று தொடங்கி 16ம் தேதி வரை, காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-70 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80 % ஆகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல அடுத்த 3 மணி நேரத்தை பொறுத்த அளவில், ராமநாதபுரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications