நெல்லை, தூத்துக்குடியில் மெல்ல திரும்பும் இயல்பு நிலை! நாளை பள்ளிகள் செயல்படுமா? வெளியானது அறிவிப்பு
திருநெல்வேலி: கனமழையால் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், பள்ளி, கல்லூரிகள் செயல்படுவது குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக தென் தமிழக மாவட்டங்களில் பரவலாக பெய்து வந்தது. இந்நிலையில் கடந்த 18, 19ம் தேதிகளில் மழை வேகமெடுத்தது. இதனால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகள் சட்டென நிரம்பின. மட்டுமல்லாது அதிலிருந்து வெளியேறிய உபரிநீர் ஊருக்குள் பாய்ந்திருக்கிறது. இதன் காரணமாக இந்த மாவட்டங்களின் பெரும்பாலான கிராமங்கள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டன.

நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் படகுகள் மூலமாக கூட மக்களை மீட்க முடியாத சூழல் இருந்தது. எனவே கடற்படையின் ஹெலிகாப்டர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டன. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வசிக்கும் சுமார் 40 லட்சம் பேர் இந்த மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தாமிரபரணி ஆற்றிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி நகரங்களில் நிலைமை மிகவும் மோசமடைந்தது.
மழை நின்று மூன்று நாட்கள் ஆன நிலையில் ஏறத்தாழ அனைத்து இடங்களிலும் வெள்ளம் வடிந்துவிட்டது. இருப்பினும், வெள்ளத்தின் போது ஏற்பட்ட சேதாரங்கள் இன்னும் சீர் செய்யப்படவில்லை. வெள்ளத்தில் சில வீடுகள் இடிந்து விழுந்திருக்கின்றன. பைக்குகள், கார்கள், பேருந்துகள் என அனைத்து வகை வாகனங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன. சாலை அடித்து செல்லப்பட்டிருக்கின்றன, மின் கம்பங்கள் சாய்ந்திருக்கின்றன. இதனை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. மழை வெள்ளம் காரணமாக கடந்த 18ம் தேதி முதல் திருநெல்வேலியில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருக்கிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், வெள்ளிக்கிழமை முதல் பள்ளிகள் படிப்படியாக செயல்பட தொடங்கும். வெள்ள நிவாரண முகாம்கள் இல்லாத கல்லூரிகள் நாளை செயல்படும் என்று கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்த அளவில் நாளை(டிச.21) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications