கிளம்பாக்கம் வெள்ளத்தில் மூழ்கிருச்சே.. அப்போ பேருந்து நிலையம்? சென்னை கனமழையால் மிதக்கும் சாலைகள்
சென்னை: இன்று சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், புதிதாக திறக்கப்பட இருக்கும் புறநகர் பேருந்து நிலையம் அமைந்து உள்ள கிளாம்பக்கம் வெள்ளத்தில் மூழ்கி இருக்கிறது.
சென்னையில் கடந்த 2 நாட்களாகவே கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த ஏ.ஆர்.ரஹ்மான் இசைக் கச்சேரியை ரத்து செய்யும் அளவுக்கு மழை வெளுத்துக் கட்டியது. இதன் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி சில மணி நேரங்களில் வடிந்தன.

"இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்." என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி இன்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.
இன்று காலை 8.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை சென்னை மீனம்பாக்கம் பகுதியில் 28 மிமீ அளவுக்கு மழை பெய்து இருப்பதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது. குறிப்பாக சென்னையின் தென் பகுதிகளான வேளச்சேரி, பெருங்குடி, தரமணி, கந்தஞ்சாவடி உள்ளிட்ட இடங்களிலும் கனமழை கொட்டித் தீர்த்து இருக்கிறது.

சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் போன்ற இடங்களிலும் மழை வெளுத்து வாங்கி இருக்கிறது. குறிப்பாக இன்று பிற்பகல் மற்றும் மாலை நேரத்தில் கனமழை பரலாக பெய்து இருக்கிறது. இதன் காரணமாக தாம்பரம், குரோம்பேட்டை சாலைகளில் மழை வெள்ளத்தில் மூழ்கின.
சமீப நாட்களாக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்து இருக்கும் கிளாம்பாக்கமும் இந்த மழை வெள்ளத்தில் இருந்து தப்பவில்லை. பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கும் தென் மாவட்டங்களுக்கான பேருந்து நிலையம் கிளாம்பாக்கத்தில்தான் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள சாலைகளில் இடுப்பளவு வரை தண்ணீர் தேங்கியது.

மழை நீர் சாலைகளில் தேங்கியதால் தாம்பரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கார்கள் நீரில் மிதக்கும் கப்பல்கள் போன்று காட்சியளித்தன. மிகவும் தாழ்வான சில பகுதிகளில் கார்கள் பாதிவரை மூழ்கின. இருசக்கர வாகன ஓட்டிகளின் நிலை இன்னும் மோசம். மழையில் நனைந்தபடியே அவர்கள் நகர முடியாமல் நின்றுகொண்டு இருந்தனர்.












Click it and Unblock the Notifications