தொடரும் மழை.. அடுத்த ஒரு வாரத்திற்கு வானிலை இப்படித்தான் இருக்கும்! வெதர் அப்டேட்
சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழையின் தீவிரம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் அடுத்த ஒரு வாரத்திற்கு, தமிழ்நாட்டில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
ஜூலை முதல் வாரம் வரை தமிழகத்தில் வெயில் வாட்டி எடுத்த நிலையில், தற்போது பருவமழை தீவிரமடைய தொடங்கியுள்ளது. எனவே வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. தென்மேற்கு பருவமழை மத்திய இந்தியா வரை உள்ள நிலப்பரப்புக்கு ஆண்டின் மொத்த மழைப்பொழிவில் 70%ஐ கொடுக்கும். எனவே இதனை நம்பி கோடிக்கணக்கான விவசாயிகள் இருக்கின்றனர்.

தமிழ்நாட்டை பொறுத்த வரை கடந்த ஜூன் 1ம் தேதி தொடங்கி நேற்று வரை 59% கூடுதலாக மழை பொழிவை தென்மேற்கு பருவமழை கொடுத்திருக்கிறது. இந்த காலங்களில் ஒட்டுமொத்தமாக சராசரியாக 220.4 மி.மீதான் மழை பொழிந்திருக்க வேண்டும். ஆனால் 350.6 மி.மீ மழை பெய்திருக்கிறது. அதிகபட்சமாக நீலகிரியில் 1177.1 மி.மீ, கோவையில் 898.2 மி.மீ என மழை பெய்திருக்கிறது.
குறைந்தபட்சமாக தூத்துக்குடியில் 50.4 மி.மீ, நாகப்பட்டினத்தில் 106.8 மி.மீ என மழை பதிவாகியுள்ளது. நாகையில் பெய்த மழை இயல்பை விட -35 சதவிகிதம் குறைவாகும். மற்ற மாவட்டங்களை விட ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டங்களில் மழை குறைவாகவே பெய்திருக்கிறது.
ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 5-ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்ததாழ்வு பகுதி உருவாகக்கூடும். எனவே இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 5 முதல் 9 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications