1 இல்ல 3.. அடுத்தடுத்து உருவாகும் பிரஷர்! 48 மணி நேரத்தில் புயல்! அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஐஎம்டி!
சென்னை: அடுத்த 48 மணி நேரத்தில் அந்தமான் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு வங்க கடலில் புயலாக மாற வாய்ப்பிருப்பதாகவும், தற்பொழுது குமரி கடல் பகுதியில் உள்ள கீழ் அடுக்கு சுழற்சி தான் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும் என வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா கூறியுள்ளார்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டிற்கான அடுத்த 7 நாட்கள் மழை நிலவரம், வங்கக்கடல், அரபிக் கடல் போன்றவற்றில் 3 வளிமண்டல சுழற்சிகள் உருவாகியுள்ளது. இந்நிலையில், தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்," இந்திய கடல் பகுதியில் 3 சுழற்சி நிலவுகின்றது. இந்தியக் கடல் பகுதியில் மூன்று சுழற்சிகள் நிலவுகிறது. முன்னதாக நேற்று மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மலேசியா மற்றும் அதனை ஒட்டிய மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவுகிறது.

அந்தமான் கடலில் தாழ்வு நிலை
இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறக்கூடும். இது மேலும் அதே திசையில் நகர்ந்து அதற்கடுத்த 48 மணி நேரத்தில், தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும். நேற்று குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடிக்குச் சுழற்சி, இன்றும் அதே பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக 25-ஆம் தேதி வாக்கில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை - தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும்.
கனமழை எச்சரிக்கை
அதன் பிறகு, இது மேலும் வலுப்பெறக்கூடும். தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி இன்றும் அதே பகுதிகளில் நிலவுகிறது. அந்தமான், குமரிக்கடல், அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் சுழற்சிகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. எனவே, காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற பிறகுதான் திசையைக் கணிக்க முடியும். அதற்கு முன்னதாக கணிக்க இயலாது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதால், தமிழகத்தில் அதிக மழை தருவதற்கான வாய்ப்பு உள்ளது.
மிக கனமழை
தமிழ்நாட்டின் நான்கு இடங்களில் அதிக கனமழையில், 17 இடங்களில் மிக கனமழையும் 60க்கும் மேற்பட்ட இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழை காலகட்டத்தில் இதுவரை 33செமீ மழை பதிவாகியுள்ளது, அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் இன்று வரை இயல்பான மழைப்பொழிவு என்பது 24 செமீ மட்டுமே, ஆனால் 33 சென்டிமீட்டர் இதுவரை பதிவாகி உள்ளதால் இயல்பை விட ஐந்து சதவீதம் அதிகமாகவே பதிவாகி உள்ளது.
அமுதா விளக்கம்
அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை தென்காசி திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும், எனவே திருநெல்வேலி தென்காசி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்க டலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை
அடுத்த 48 மணி நேரத்திற்கு தென் கடலோரம் மாவட்டங்கள், கன்னியாகுமரி திருநெல்வேலி தூத்துக்குடி இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 26 ஆம் தேதி தென் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையும் 27ஆம் தேதி தூத்துக்குடி ராமநாதபுரம் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 28ஆம் தேதி காரைக்கால் மாவட்டத்திற்கு மிக கனமழை எச்சரிக்கையும், 29ஆம் தேதி வடகடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை ஆகியவற்றிற்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது." என்றார்.












Click it and Unblock the Notifications