மும்பையை புரட்டிப் போட்ட புழுதிப் புயல்.. ராட்சத இரும்பு பலகை விழுந்து 8 பேர் பலி.. 59 பேர் காயம்!
மும்பை: மும்பையில் வீசிய கடுமையான புழுதிப் புயலால் ராட்சத இரும்பு பேனர் சாலை மற்றும் பெட்ரோல் பங்கில் விழுந்ததில் 8 பேர் பலியாகினர். மேலும் 59 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியை தொடர்ந்து மும்பையிலும் இன்று புழுதிப் புயல் வீசியது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. முன்னதாக, இந்திய வானிலை மையம் மும்பையில் கனமழைக்கான எச்சரிக்கையை விடுத்திருந்தது.

தாதர், குர்லா, மாஹிம், காட்கோபர், முலுண்ட் மற்றும் விக்ரோலி ஆகிய புறநகர்ப் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. தெற்கு மும்பையின் சில பகுதிகளிலும் மழை பெய்தது. தானே, அம்பர்நாத், பத்லாபூர், கல்யாண் மற்றும் உல்ஹாஸ்நகர் ஆகிய இடங்களிலும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்தது.
இந்நிலையில் இன்று மாலை மும்பையில் கடுமையான புழுதிப் புயல் வீசியது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். 40 - 50 கி.மீ. வேகத்தில் வீசிய புழுதிப் புயல் காரணமாக மும்பை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
புழுதிப் புயல் கடுமையாக வீசியபோது மும்பையின் காட்கோபர் பகுதியில் ராட்சத இரும்பு விளம்பர பலகை ஒன்று சரிந்து பெட்ரோல் பங்க் மீது விழுந்தது. இதில் பெட்ரோல் பங்கில் நின்றுகொண்டிருந்த வாகனங்கள் மற்றும் சாலையில் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் சிக்கியது. இதையடுத்து உடனடியக அங்கு மீட்பு பணி நடந்தது.
இதில் தற்போது 8 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 59 பேர் படுகாயமடைந்ததாகவும், அவர்கள் அங்குள்ள மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பாக மகாரஷ்டிரா முதல்வர் ஏக்னாத் ஷிண்டே சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் வழங்க உத்தரவிட்டார்.
மேலும், வடாலா பகுதியில் உள்ள கார் பார்க்கிங்கின் லிப்ட் இடிந்து விழுந்ததில் பலர் காயமடைந்தனர். பர்கத் அலி நாகா என்ற இடத்தில் கார் பார்க்கிங் லிப்ட் இடிந்து விழுந்தது. தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சிலருக்கு அப்பட்டமான அதிர்ச்சி ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications