இன்று முதல் 6 நாட்களுக்கு மழை கொட்டப்போகுது.. சென்னை வானிலை மையம் விடுத்த அலர்ட்!
சென்னை: இன்று முதல் ஆறு நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. வங்கக்கடலில் உருவான டிட்வா புயலால் கடந்த வாரத்தில் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. டிட்வா புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவியது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.

பல்வேறு மாவட்டங்களிலும் மழை
நேற்று தேனி மாவட்டத்தில் முருகமலை, தாமரைக்குளம், வடுகபட்டி, சோத்துப்பாறை அணை, கும்பக்கரை அருவி மற்றும் வனப்பகுதியை ஒட்டிய இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்தது.
நாகை மாவட்டத்தில் வெளிப்பாளையம், காடம்பாடி, பால் பண்ணைச்சேரி, நாகூர், தெத்தி, சங்கமங்கலம், பாலையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மழைநீர் தேங்கியது.
திண்டுக்கல், விருதுநகரில் மழை
திண்டுக்கல் மற்றும் தாடிக்கொம்பு, அகரம், செட்டி நாயக்கன்பட்டி, சிறு நாயக்கன்பட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளான பாளையம்பட்டி, ஆத்திபட்டி, கஞ்சநாயக்கன்பட்டி, சுக்கில நத்தம், வெள்ளையாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
வானிலை ஆய்வு மையம்
இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
07-12-2025 முதல் 11-12-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை நிலவரம்
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications