சென்னை+18 மாவட்டங்களை சுத்துப்போட்ட கருமேகங்கள்.. அடுத்த 1 மணி நேரம் முக்கியம்! வானிலை மையம் அலர்ட்
சென்னை: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்த 1 மணி நேரத்தில் சென்னை உட்பட 19 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
ஜூலை முதல் வாரம் வரை தமிழகத்தில் வெயில் வாட்டி எடுத்த நிலையில், தற்போது பருவமழை தீவிரமடைய தொடங்கியுள்ளது. எனவே வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. தென்மேற்கு பருவமழை மத்திய இந்தியா வரை உள்ள நிலபரப்புக்கு ஆண்டின் மொத்த மழைப்பொழிவில் 70%ஐ கொடுக்கும். எனவே இதனை நம்பி கோடிக்கணக்கான விவசாயிகள் இருக்கின்றனர்.

தமிழ்நாட்டை பொறுத்த வரை கடந்த ஜூன் 1ம் தேதி தொடங்கி 10ம் தேதி வரை 79% கூடுதலாக மழை பொழிவை தென்மேற்கு பருவமழை கொடுத்திருக்கிறது. இந்த காலங்களில் ஒட்டுமொத்தமாக 68.9 மி.மீதான் மழை பொழிந்திருக்க வேண்டும். ஆனால், 123.7 மி.மீ மழை பெய்திருக்கிறது. அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டத்தில் 120.6 மி.மீ, சென்னையில் 204 மி.மீ என மழை பெய்திருக்கிறது. குறைந்தபட்சமாக தூத்துக்குடியில் 6.9 மி.மீ, நாகப்பட்டினத்தில் 45.2 மி.மீ என மழை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட தலா -18, -1 சதவிகிதம் குறைவாகும்.
அதேபோல அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் லேசானது முதல் மிதமானது வர மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. என்னதான் மழை இயல்பை விட அதிகமாக பெய்திருந்தாலும் தென் மாவட்டங்களில் உள்ள அணைகளின் நீர்மட்டம் மட்டுமே அதிகரித்திருக்கிறது. உள் தமிழக மாவட்டங்களில் குறிப்பாக சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் நீர் மட்டம் போதுமான அளவுக்கு உயரவில்லை. எனவே டெல்டா மாவட்ட விவசாயிகள் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள்.
இப்படி இருக்கையில் அடுத்த 1 மணி நேரத்திற்கு 19 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது குறித்து விடுத்துள்ள அறிவிப்பில், "சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, நீலகிரி, திருப்பூர், கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும்" என மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.
மஞ்சள், ஆரஞ்சு அலர்ட் விளக்கம்: 64.5 மி.மீ முதல் 115. 5 மி.மீ வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டால், மஞ்சள் அலர்ட் விடுக்கப்படும். இதுவே, ஒரு நாளில் 115.6 முதல் 204.4 மிமீ வரையிலான மழைப்பொழிவுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படும்.
ரெட் அலர்ட் விளக்கம்: மக்களின் இயல்பு நிலை பாதிக்கும் வகையில் மழைப் பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கும் போது ரெட் அலர்ட் விடப்படும். இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டால் போக்குவரத்து, மின்சாரம், இணையம், மற்றும் தொலைத் தொடர்பு துண்டிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்று அர்த்தம். 24 மணி நேரத்தில் 204.5 மிமீக்கு அதிகமாக மழை பெய்யும் போது ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications