குமரிக் கடலில் ‘சக்கரம்’.. பேய் மழை வெளுக்க போகுது!தமிழ்நாட்டை நோக்கி வரும் புயல்? வெதர்மேன் அப்டேட்
சென்னை: நவம்பர் முதல் இரு வாரங்கள் மழையின்றி தமிழகம் வெறிச்சோடி காணப்பட்ட நிலையில் இரண்டாவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை வேகம் பிடித்துள்ளது. இந்த நிலையில் அடுத்த ஐந்து நாட்களில் வங்க கடலில் புதிய புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளரான 'தமிழ்நாடு வெதர்மேன்' பிரதீப் ஜான் கணித்துள்ளார். இதனால் நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் எனவும், சென்னையில் இன்று மட்டும் 20 முதல் 40 மில்லி மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார்.
அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை, அடுத்தடுத்து உருவாகிய இரண்டு புயல் சின்னங்களின் தாக்கத்தால் தமிழகத்திற்கு பரவலான மழை கொடுத்தது. ஆனால் அதன் பின்னர் 10 நாட்களுக்கு மேல் மழையின்றி வறண்ட காலநிலையே நிலவியது.
தற்போது இலங்கை கடற்கரைக்கு அருகிலிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்குத் திசை நோக்கி நகரத் தொடங்கியதால் மழை மீண்டும் பெய்யத் தொடங்கியுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததன்படி, வருகிற 22ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்.

வானிலை
அது மேலும் 48 மணி நேரத்தில் வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் வாய்ப்பு அதிகம். இது உருவாகியவுடன் தமிழகத்தில் மீண்டும் மழை பெய்யக் கூடும் எனவும், இன்று (நவம்பர் 18) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என அறிவித்துள்ளது.
தமிழ்நாடு வெதர்மேன்
இந்த நிலையில் அடுத்த ஐந்து நாட்களில் வங்க கடலில் புதிய புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளரான 'தமிழ்நாடு வெதர்மேன்' பிரதீப் ஜான் கணித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள கணிப்பில்," இன்று காலை சென்னையில் சூரியன் தெரிந்தாலும், மழை மேகங்கள் வேகமாக நகர்ந்து வருகிறது. சென்னை நகரின் வடக்கிலும் தெற்கிலும் வட்டமடிக்கும் மழை மேகங்கள் உருவாகி வருகின்றன. இன்று மட்டும் 20 முதல் 40 மில்லிமீட்டர் வரை மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
மழை எச்சரிக்கை
இன்று இரவு முதல் காற்றழுத்த தாழ்வு காரணமாக தென் தமிழகத்தில் மழை அதிகரிக்கும். டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் பகுதிகளில் நேற்று இரவு பரவலாக மழை பெய்துள்ளது. இந்நிலையில், குமரிக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மேற்கு நோக்கி அரபிக்கடலுக்கு நகரும் போது, தென் தமிழகத்தில் மிக கனமழை ஏற்படும். தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக மழை பெய்யும்.
புதிய புயல் உருவாக வாய்ப்பு
முக்கியமாக, தற்போதைய தாழ்வு நிலை அரபிக்கடலுக்கு நகர்ந்த பின், அடுத்த 5 நாட்களில் வங்கக் கடலில் 'சக்கரம்' (புயல்) உருவாக வாய்ப்பு இருக்கிறது. இந்த புயல் உருவானால் அதன் பாதை, வலிமை மற்றும் தமிழகத்திற்கு ஏற்படும் தாக்கம் குறித்து அடுத்த சில நாட்களில் தெளிவு கிடைக்கும். வடகிழக்கு பருவமழையின் அடுத்த கட்டம் தீவிரமடைவதால், தென் மாவட்டங்கள் முதல் சென்னை வரை வரும் நாட்களில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு மிக அதிகம்" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications