நெல்லை உள்பட 4 மாவட்டங்களுக்கு இன்று ஆம்னி பேருந்துகள் இயங்காது.. உரிமையாளர்கள் அறிவிப்பு
சென்னை: தென் மாவட்டங்களுக்கு இன்று ஆம்னி பேருந்து இயக்கப்படாது என உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளனர்.
வடதமிழகத்தில் கடந்த டிசம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் கனமழை வெளுத்தெடுத்தது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளித்தன. இந்த வரலாறு காணாத மழையால் பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பி வீடுகளுக்குள் தண்ணீர் வந்துவிட்டன.

இதனால் மக்கள் குடிக்க நீரின்றியும், கரண்ட் இன்றியும், அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமலும் அவதிப்பட்டனர். இந்த நிலையில் தற்போது தென் தமிழகத்தில் மழை பெய்துவருகிறது. இது அங்குள்ள பெரும்பாலான மாவட்டங்களை வெள்ளக்காடாக்கியுள்ளது.
நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் மழை மேலும் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. இந்த 4 மாவட்டங்களிலும் ஏற்கெனவே பெய்து வரும் மழையால் வெள்ள நீர் தேங்கியுள்ளது. தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் கார்கள் மூழ்கி சென்னை பள்ளிக்கரணையை நினைவுபடுத்துகின்றன.
நெல்லை மணிமுத்தாறில் இருந்து 10 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அது போல் தாமிரபரணி ஆற்றிலிருந்து 20 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூரில் மழை வெள்ளம் சூழ்ந்து தனித்தீவாக காட்சியளிக்கிறது. காயல்பட்டினத்தில் வரலாறு காணாத அளவுக்கு 93 செமீ மழை கொட்டி தீர்த்தது.
அது போல் நெல்லை தாமிரபரணியை ஒட்டியுள்ள வடக்கு புறவழிச்சாலையில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் கழுத்தளவுக்கு மழை நீர் சூழ்ந்துள்ளது. வீடுகளில் இருப்போரை கயிறு கட்டி மீட்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. அது போல் ஆரல்வாய்மொழி பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்த நிலையில் அங்கிருந்தவர்களும் மீட்கப்பட்டுள்ளனர்.
அது போல் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. 43 நாட்களாக மூடப்பட்டிருந்த அருவியில் கடந்த 2 தினங்களாக குளிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மழையால் அதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
1992ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழகத்தில் பதிவான அதி கனமழையாக காயல்பட்டினத்தில்தான் பெய்தது. 1992 ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம் காக்காச்சியில் 96.5 செ.மீ. மழை பதிவானதுதான் முதல் அதிகபட்ச மழையாகும். அது போல் தேனி, குமுளி, கம்பம்மெட்டு, போடி மெட்டு ஆகிய பகுதிகளில் நிலச் சரிவு ஏற்பட்டுள்ளதால் தேனி- கேரளா செல்லும் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று ஆம்னி பேருந்துகள் இயங்காது என உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மேற்கண்ட 4 மாவட்டங்களிலும் வழக்கமாக 300 ஆம்னி பேருந்துகள் இயங்கி வந்த நிலையில் இன்று அந்த ஆம்னி பேருந்துகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications