வடகிழக்கு பருவமழை தீவிரம்.. மறந்தும் செய்யக்கூடாத தவறுகள் .. மின்சாரம் வாரியம் வெளியிட்ட அறிவிப்பு
கோவை: வடகிழக்கு பருவமழையில் மின்னலின்போது, மரங்களின் அடியில் நிற்க கூடாது.. மழை காலங்களில் மின்கசிவால் ஏற்படும் விபத்துகளை தடுக்க ஆர்.சி.சி.பி., ஆர்.சி.பி.ஓ. எனப்படும் மின் கசிவு தடுப்பான்களை வீடுகளில் மெயின் சுவிட்ச் போர்டில் பொருத்த வேண்டும். வயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்ற ஒப்பந்ததாரர் மூலமாக மட்டுமே செய்ய வேண்டும் என கோவை வடக்கு மின் ஆய்வாளர் அறிவுறுத்தியுள்ளார்.
கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதையொட்டி மின் விபத்துகளை தவிர்ப்பது தொடர்பாக கோவை வடக்கு மின் ஆய்வாளர் எஸ்.பாலமுருகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "மழை காலங்களில் மின்கசிவால் ஏற்படும் விபத்துகளை தடுக்க ஆர்.சி.சி.பி., ஆர்.சி.பி.ஓ. எனப்படும் மின் கசிவு தடுப்பான்களை வீடுகளில் மெயின் சுவிட்ச் போர்டில் பொருத்த வேண்டும். வயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்ற ஒப்பந்ததாரர் மூலமாக மட்டுமே செய்ய வேண்டும்.

ஐ.எஸ்.ஐ. முத்திரை பெற்ற தரமான மின்சாதனங்களை பயன்படுத்த வேண்டும். ஈரமான அறைகளில் சுவிட்ச் பொருத்தக் கூடாது. ஒவ்வொரு வீட்டிலும் சரியான நில இணைப்பு போடுவதுடன் அதை குழந்தைகள், விலங்குகள் தொடாத வகையில் பராமரிக்க வேண்டும். வீட்டு உபயோக மின் சாதனங்களுக்கு மூன்று பின்பிளக்குகளில் மட்டுமே மின் இணைப்பு கொடுக்க வேண்டும்.
கேபிள் டி.வி.வயர்களை மேல்நிலை கம்பிகளுக்கு அருகில் கொண்டு செல்லக்கூடாது. மின்கம்பம் மற்றும் அதை தாங்கும் கம்பிகளில் கால்நடைகளை கட்டக்கூடாது. மின்கம்பங்களை பந்தல்களாக பயன்படுத்தக்கூடாது. அதில் விளம்பர பலகைகளை கட்டக்கூடாது. மழை காலங்களில் மின்மாற்றி, மின்கம்பம், மின் பகிர்வு பெட்டி அருகே செல்லக்கூடாது.
மழை, காற்றில் அறுந்து விழுந்த மின்கம்பி அருகே செல்லக் கூடாது. மின்வாரிய அலுவலகத்துக்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும். மின்கம்பிகளுக்கு அருகே உள்ள மரக்கிளைகளை வெட்ட மின்வாரிய அலுவலர்களை தொடர்பு கொள்ள வேண்டும்.
மின்னல் ஏற்படும் போது திறந்தவெளி, மரத்தின் அடியில், தண்ணீர் தேங்கிய பகுதி, திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு அருகில் நிற்கக்கூடாது. கான்கிரீட் வீடு, பஸ், கார் மற்றும் வேன் போன்ற வாகனங்களில் தஞ்சம் அடையலாம். மழையின் போது வீட்டு உபயோக மின்சாதனங்கள், செல்போனை பயன்படுத்தக் கூடாது" இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications