எல் நினோ.. சூடாக இருக்கும் கடல்.. திடீரென கொட்டும் கனமழை.. காரணம் சொன்ன பாலச்சந்திரன்
சென்னை: வடகிழக்கு பருவமழை தற்போதைக்கு முடிவுக்கு வர வாய்ப்பு இல்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
கடந்த அக்டோபர் மாத இறுதியில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை ஜனவரி வரை நீடிக்கிறது. மார்கழி மாதத்தில் அதிகனமழையும் பதிவாகியுள்ளது. இந்த கனமழைக்கான காரணம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய பாலச்சந்திரன், கடந்த 5 ஆண்டு காலமாகவே வடகிழக்கு பருவமழை ஜனவரி மாதம் வரை நீடிக்கிறது. 2018 ஆண்டு ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி முடிவுக்கு வந்தது, 2019ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி மழை முடிவுக்கு வந்தது. 2020ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதியும் கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்தது. கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி மழை முடிந்தது.
கடந்த சில ஆண்டு காலமாகவே அக்டோபர் மாத இறுதியில்தான் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது. பருவமழை முழுவதுமாக நின்ற பிறகுதான் முடிவுக்கு வருவது குறித்து அறிவிக்கப்படும். சென்னையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தென் மாவட்டங்களைப் பொருத்தவரைக்கும் குமரிக்கடலை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
ஜனவரி 11, 12ம் தேதிகளில் தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்ப உள்ளது. சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் அதி கனமழைக்கான வாய்ப்புகள் இல்லை. கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 125 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. ஜனவரியில் இது அதிகபட்ச மழையாகும். ஜனவரி மாதத்தில் நாகையில் 205 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது இரண்டாவது அதிகபட்ச மழை அளவாகும்.
சீர்காழி, சிதம்பரம், வேளாங்கண்ணி, திருவாரூர், நாகை பகுதிகளில் அதிகனமழை பெய்துள்ளது, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு, கடலூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது, எனவும் தெரிவித்துள்ளார்.
இது எல் நினோ ஆண்டு என்பதால் வட இந்திய கடல் முழுவதும் இன்னமும் வெப்பமாகவே உள்ளது. வடக்கு வங்கக் கடலில் இருந்து வடகிழக்கு திசை காற்றும், கிழக்கு திசையில் இருந்து கிழக்கு திசை காற்றும் சந்திக்கிறது. இதன் காரணமாக மேகக்கூட்டங்கள் திடீர் என உருவாகி விட்டு விட்டு கனமழை பெய்வதாகவும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மழையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் பாலச்சந்திரன் கூறியுள்ளார். அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை காலத்தில் இதுவரைக்கும் 455 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு 445 மில்லி மீட்டர் பதிவானது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 4 சதவிகிதம் மழை அதிகமாகும்.
ஜனவரி மாதத்தில் கடந்த 8 நாட்களில் 28.7 மிமீ மழை பதிவாகியுள்ளது. இந்த கால கட்டத்தில் 5 மிமீ மழை அளவுதான் பதிவாகும். மேகக் கூட்டங்கள் இருப்பதால் தற்போதைக்கு பனிபொழிவு குறைவாகவே இருக்கும். மழை முடிந்த பிறகுதான் பனிபொழிவு இருக்கும் என்றும் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications