வேளச்சேரியில் மேலும் ஒருவரின் உடல் மீட்பு.. தவறு செய்தவர்களை தப்பிக்கவிட மாட்டோம்.. ராதாகிருஷ்ணன்
சென்னை: வேளச்சேரியில் கட்டுமான இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளி ஒருவரின் உடல் இன்று மீட்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தவறு செய்தவர்களை தப்பிக்க விடமாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையின் பல பகுதிகளில் வெள்ள நீர் வடியவில்லை. தெருக்களில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தினால், வீடுகளை விட்டு மக்களால் வெளியே வர முடியாத நிலைமை உள்ளது.. குறிப்பாக, புறநகர்ப்பகுதிகளில் பெரும்பாலான குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. வெள்ள நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். முன்னதாக மிக்ஜா புயலின் போது சென்னை வேளச்சேரியில் பெட்ரோல் பங்க் அருகே, திடீரென 50 அடிப்பள்ளம் ஏற்பட்டது.

இந்த பள்ளத்தில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்று தரையில் இறங்கிவிட்டது.. கண்டெய்னர் சரிந்து விழுந்துவிட்டதால் இந்த விபத்து நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. 5 பர்லாங் சாலையில் எரிவாயு நிலையத்தின் அருகே கட்டுமான பணிகள் நடந்து வந்ததாகவும், இதற்காக தான் இங்கு 50 அடி பள்ளம் தோண்டப்பட்டதாவும் தகவல்கள் வெளியாகினர். இந்த 50 அடி பள்ளத்தில் தான் அருகே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக அறையானது விழுந்துள்ளது.
இந்த 50 அடி பள்ளத்தில் சிக்கிய 8 பேரில் 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மேலும் 2 பேரை மீட்க தொடர்ந்து மீட்பு பணி நடந்து வந்தது. தீயணைப்பு படை வீரர்கள், மீட்புப் படையினர் பள்ளத்தில் விழுந்த ஊழியர்களை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் இன்று காலை 2 பேரில் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டார். பள்ளத்தில் விழுந்த 5வது நாளில், இன்று காலை அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பள்ளத்தில் மூழ்கிய மற்றொருவரின் உடலை தேடும் பணி நடந்து வந்த நிலையில், அவரது உடலும் மதியம் 2 மணியளவில் மீட்கப்பட்டது. இதற்கிடையே சம்பவ இடத்தில் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், "வேளச்சேரி கட்டுமான விபத்தில் தவறு செய்தவர்களை தப்பிக்கவிட மாட்டோம். பாதிக்கபட்டவர்களுக்கு அரசு மூலம் நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்யபடும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications