Rain Alert: இன்று காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் மழை கொட்டும்.. வானிலை மையம் அலர்ட் மெசேஜ்!
சென்னை: தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துவரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில், வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், இன்று மிக தீவிர புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, நேற்று முன் தினம் தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. இது மேலும் வலுப்பெற்று நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, புயலாக இன்று (திங்கட்கிழமை) உருவாகிறது.
மிக தீவிர புயலாக வலுப்பெறவுள்ள இந்த புயலுக்கு அர்னாப் புயல் என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று மிக தீவிர புயலாக ஆந்திர கடலோர பகுதிகளை அடையலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிக கன மழையும் பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், புதுச்சேரி, காரைக்கால் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (26-10-26) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போல், திண்டுக்கல், கோவை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அம்மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கோத்தகிரி, குந்தா ஆகிய 4 தாலுகாவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் தியாகதுருகம், சின்ன சேலம் ஆகிய 2 வட்டங்களில் உள்ள 5 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் பத்மஜா உத்தவிட்டுள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டத்தில் உள்ள 26 பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சுமார் 1.5 கி.மீ. உயரம் வரை தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து வடக்கு தமிழக கடலோர பகுதிகள் வரை கேரளா வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
