கனமழை எச்சரிக்கை.. திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட முதல்வர் முக ஸ்டாலின்
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே பல பகுதிகளில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அரசு மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் மழை முன்னெச்சரிக்கை தொடர்பாக சென்னை, தாம்பரம், ஆவடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட வட மாவட்டங்கள் தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கனமழை பதிவாகியுள்ளன.

பள்ளி, கல்லூரிகள் விடுமுறை
கோவை, திருப்பூர், நீலகிரி சேலம் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மையம், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு அலர்ட் விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மழை முன்னெச்சரிக்கை காரணமாக 19 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் மழை நிவாரண பணிகள், கண்காணிப்பு ஆகியவற்றுக்காக 12 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் (ஐஏஎஸ் அதிகாரிகள்) நியமிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
திமுக நிர்வாகிகள் கூட்டம்
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக திமுக நிர்வாகிகள் கூட்டத்திற்கு கட்சி தலைமை அழைப்பு விடுத்திருந்தது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திமுக நிர்வாகிகள் கலந்துகொள்ளும் இந்தக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது.
எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மேயர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளுடன் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர்கள், மாநகர, நகர, பேரூராட்சி, வட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பருவ மழையின்போது எடுக்க வேண்டிய நடவடிக்கை, கட்சி சார்பிலான நிவாரணப் பணிகள் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
அறிவுறுத்தல்
இந்தக் கூட்டத்தில் திமுக தலைமைக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள், சம்பந்தப்பட்ட பகுதி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினர். மேலும் முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோரும் திமுக நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை வழங்கினர். கனமழை தொடர்பாக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்து மக்களுக்கு உதவி செய்ய அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications