இரவு காத்திருக்கும் சம்பவம்.. சென்னை, செங்கல்பட்டு உட்பட 10 மாவட்டங்களில் மழை பெய்யும்! பரபர அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு உட்பட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே வாட்டி வதைத்து வந்த கோடை வெப்பம் இப்போது முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 2, 3 மாதங்களாகப் பொதுமக்களால் மதிய நேரங்களில் வெளியே செல்லக் கூட முடியாத அளவுக்கு வெப்பம் உச்சத்தில் இருந்தது.

ஜூன் மாதம் ஆரம்பித்த பிறகே வெப்பம் பரவலாகத் தணிந்து வருகிறது. மாநிலத்தில் பரவலாகப் பெய்யும் மழை வெப்பத்தையும் கணிசமாகக் குறைக்க உதவி இருக்கிறது.
10 மாவட்டங்கள்: இதற்கிடையே அடுத்த மூன்று மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 3 மணி நேரத்திற்கு அதாவது இரவு 11 மணி வரை புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு: இதன் காரணமாக நகரில் சில இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கலாம் என்றும் இதனால் டிராபிக் பாதிப்பும் ஏற்படலாம் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி வானிலை மையம் கேட்டுக் கொண்டுள்ளது. அதேபோல சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இத்தனை காலம் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், இந்த மழை வெப்பத்தைத் தணிப்பதாக இருக்கிறது.
வானிலை மையம்: முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட தினசரி செய்திக்குறிப்பில், "தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூன் 13 முதல் 17 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
அதிகபட்ச வெப்ப நிலையைப் பொறுத்தவரை இன்று முதல் ஜூன் 15 வரை அடுத்த ஐந்து தினங்களுக்கு, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில், அதிகபட்ச வெப்ப நிலை 2° - 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை கிளைமேட்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று வானிலை மையம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications