இன்று இரவுக்குள் 13 மாவட்டங்களில் மழை தட்டியெறியப்போகுது.. வானிலை மையம் அலர்ட் மெசேஜ்!
சென்னை: இன்று இரவு 10 மணிக்குள் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டையில் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனி, திண்டுக்கல், தென்காசி, திருச்சி, நாகப்பட்டினம், கடலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை எச்சரிக்கை
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து கேரளாவை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பகுதிகள், வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள், மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிககளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அதேபோல், மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு, வடக்கு மற்றும் தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகள், மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகள், தெற்கு அரபிக்கடல் பகுதிகள், கொங்கன்- கோவா - கர்நாடகா-கேரளா கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆகையால், இப்பகுதிகளுக்கு மீனவர்கள் இன்று செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
இன்று இரவு 9 மணிக்குள்
இன்று இரவு 10 மணிக்குள் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மிதமான இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருச்சி, நாகப்பட்டினம், கடலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும், கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளிலும் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications