சென்னையில் அடுத்த ஒரு மணி நேரம்.. விட்டு விளாசப் போகுது மழை.. 6 மாவட்டங்களுக்கு அலர்ட்
சென்னை: தமிழகத்தில் அடுத்த ஒரு மணி நேரத்தில் சென்னை உள்பட 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலையிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. ஏற்கனவே கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த இரு நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. நேற்றும் வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகரித்தது. சென்னை உள்பட வட மாவட்டங்களில் வெயில் அதிகரித்தது. மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது. ஆனால் இன்று தலைநகர் சென்னையில் மதிய நேரமே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

6 மாவட்டங்களுக்கு அலர்ட்
மாலை 4 மணியளவில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. வழக்கத்திற்கு மாறாக இன்று காற்றின் வேகமும் அதிகரித்து காணப்பட்டது. இந்த சூழலில் தான் சென்னை உள்பட 6 மாவட்டங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
"சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
இன்றும் நாளையும் மழை பெய்யுமிடங்கள்
முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், "தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதனால் இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களின் மலை பகுதிகள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (40 முதல் 50 கிமீ வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (40 - 50 கிமீ வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். வரும் 1 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை
இன்று முதல் 30 ஆம் தேதி வரை வேலூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு சான்ஸ்
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 முதல் 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னையில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 முதல் 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
