7 மாவட்டங்களில் இன்று மழை மிரட்டப்போகுது.. வானிலை மையம் கொடுத்த அலர்ட் மெசேஜ்!
சென்னை: தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டின் ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்தவகையில் இன்று அடுத்த 3 மணி நேரத்திற்குள், அதாவது, இரவு 7 மணிக்குள் 7 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோவை, திருப்பூர், நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு 7 மணிக்குள் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சில இடங்களில் மழைநீர் தேங்கக்கூடும், போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளையும் (ஜூன் 30) நாளை மறுநாளும் (ஜூலை 1) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஜூலை 2 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் 3ஆம் தேதி வரை அடுத்த ஐந்து நாட்களுக்கு, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில், அதிகபட்ச வெப்ப நிலை பொதுவாக இயல்பை ஒட்டியும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில், 23 செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37 செல்சியஸை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 28-29 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications