வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம்.. புயலாக மாறுமா? எங்கெங்கு மழை?.. வானிலை மையம் சொல்வதென்ன?
சென்னை: வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வட மாநிலங்களில் கனமழை நீடிக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வரப்போகிறது. வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளது. அவ்வப்போது சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. பகல் நேரங்களில் வெயிலும் மாலையில் மழையுமாக கலவையான பருவநிலையாக உள்ளது.

வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 22 ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இதனிடையே வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழறிச்சி வழுப்பெற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று ஒடிசா மற்றும் தெற்கு ஜார்கண்ட பகுதியை நோக்கி நகரக்கூடும் எனவும், இதன் காரணமாக ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் அடுத்த சில நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு ஐயம் தெரிவித்து உள்ளது. ஏற்கனவே குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, வேலூர், ராணிப்பேட்டை, தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, ஈரோடு மற்றும் நாமக்கல் ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications