டெல்டா+தென் மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் முக்கியம்!
சென்னை: வங்கக்கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தற்போது அரபிக்கடலை நோக்கி நகர்ந்திருக்கிறது. இந்நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில், அதாவது காலை 10 மணி வரை 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. வழக்கமாக தென்மேற்கு பருவமழையை விட வட கிழக்கு பருவமழைதான் தமிழகத்திற்கு அதிக அளவில் மழையை கொடுக்கும். அந்த வகையில், இந்த ஆண்டும் தமிழகத்திற்கு இயல்பை விட 32% அதிக மழைப்பொழிவு கிடைத்திருக்கிறது. அதாவது வழக்கமாக அக்.1ம் தேதி தொடங்கி, டிச. 13ம் தேதி வரை தமிழ்நாட்டில் 40.4 செ.மீதான் மழை பெய்யும். இந்த முறை 53.5 செ.மீ மழை பதிவாகியிருக்கிறது.

அதிகபட்சமாக நாகை மாவட்டத்தில் 108 செ.மீ அளவுக்கு மழை கொட்டி தீர்த்திருக்கிறது. இரண்டாவதாக சென்னையில் 97.3 செ.மீ, விழுப்புரம் மாவட்டத்தில் 85.5 செ.மீ பெய்திருக்கிறது. ஒப்பீட்டளவில் பார்த்தால் திருப்பத்தூர் மாவட்டத்தில்தான் அதிக மழை பெய்திருக்கிறது. அதாவது இந்த காலத்தில் 25.1 செ.மீதான் மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் 48.2 செ.மீ அளவுக்கு பெய்திருக்கிறது. இது இயல்பை விட 92% அதிகமாகும்.
இந்நிலையில் இன்று காலை 10 மணி வரை, அதாவது அடுத்த 2 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் இடி,மின்னலுடன் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதன்படி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications