குடை ரெடியா?.. தமிழகத்தில் ஒரு வாரத்துக்கு மழை தொடரும்.. இன்று 12 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்!
சென்னை: தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மிதமான மழை தொடரும் என்றும், இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கடலூர், அரியலூர், தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், சென்னையில் இன்று, நாளை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நாகை, கடலூர், திருவாரூர், மயிலாடுதுறை, விழுப்புரம், நெல்லை, குமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் படிப்படியாக மழை குறைந்தாலும், தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

12 மாவட்டங்களில்: நேற்று நெல்லை மற்றும் கடலூர் மாவட்டத்தில் கனமழை பெய்தது. குறிப்பாக நெல்லையில் நேற்று பல இடங்களில் 10 செமீ அளவு மழை பெய்தது. இதேபோல் தென்காசி, மயிலாடுதுறை, விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்களிலும் மழை பெய்தது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மழை தொடரும்: அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 19-11-2024 முதல் 23-11-2024 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் எப்படி?: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மழை அளவு:
நாலுமுக்கு (திருநெல்வேலி) 11, ஊத்து (திருநெல்வேலி) 10, வனமாதேவி (கடலூர்), வெட்டிக்காடு (தஞ்சாவூர்) தலா 9, பூதலூர் (தஞ்சாவூர்), காக்காச்சி (திருநெல்வேலி), கடலூர் ஆட்சியர் அலுவலகம் (கடலூர்) தலா 8, பாகூர் (புதுச்சேரி), SRC குடிதாங்கி (கடலூர்), மாஞ்சோலை (திருநெல்வேலி), கடலூர் (கடலூர்), பண்ருட்டி (கடலூர்), அமராவதி அணை (திருப்பூர்) தலா 7, RSCL-3 செம்மேடு (விழுப்புரம்), மரக்காணம் (விழுப்புரம்), கே.எம்.கோயில் (கடலூர்), சத்யபாமா பல்கலைக்கழகம் ARG (செங்கல்பட்டு), பாபநாசம் (திருநெல்வேலி) தலா 6,
ஒட்டன்சத்திரம் (தர்மபுரி), செய்யார் (திருவண்ணாமலை), கடனா அணை (தென்காசி), மண்டலம் 15 உத்தண்டி (சென்னை), குருவாடி (அரியலூர்), சோழிங்கநல்லூர் (சென்னை), செஞ்சி (விழுப்புரம்), மண்டலம் 15 சோழிங்கநல்லூர் (சென்னை), லால்பேட்டை (கடலூர்), புள்ளம்பாடி (திருச்சிராப்பள்ளி), செய்யார் ARG (திருவண்ணாமலை), ஆண்டிபட்டி (தேனி), திருத்தணி (திருவள்ளூர்), திண்டிவனம் (விழுப்புரம்) தலா 5 செமீ பெய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications