வெயில் + மழை.. அடுத்த ஒருவாரம் தமிழகம் இப்படித்தான் இருக்கும்! வானிலை அப்டேட்
சென்னை: தமிழகத்தில் அடுத்த ஒருவாரத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும், அதே நேரம் வெயிலும் அதிகரிக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், "தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே, இன்று முதல் 23 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த 5 தினங்களுக்கான முன்னறிவிப்பு:
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கு இன்று தொடங்கி 21 வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் சற்று குறையக்கூடும். இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு இன்று முதல் 21 வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கக்கூடும்.
சென்னை வானிலை முன்னறிவிப்பு:
இன்று (17-03-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (18-03-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை எச்சரிக்கை ஏதுமில்லை.
கடந்த 24 மணி நேரத்திற்கான வானிலை தொகுப்பு:
மழை நிலவரத்தை பொறுத்த அளவில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பதிவாகியுள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்) தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி) 5, தென்பரநாடு (திருச்சிராப்பள்ளி), அருப்புக்கோட்டை (விருதுநகர்), விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி) தலா 2, திருப்புவனம் (சிவகங்கை), கோவில்பட்டி (தூத்துக்குடி), சாத்தான்குளம் (தூத்துக்குடி), சாத்தான்குளம் ARG (தூத்துக்குடி) தலா 1 என மழை பெய்திருக்கிறது.
வெப்பநிலை நிலவரம்: அதிகபட்ச வெப்பநிலையாக வேலூரில் 37.0° செல்சியஸ் பதிவாகியுள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை (சமவெளிப்பகுதிகளில்) கரூர் பரமத்தியில் 21.5° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றம் ஏதுமில்லை. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3.5° செல்சியஸ் குறைந்துள்ளது.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பெரும்பாலான இடங்களில் பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2-4" செல்சியஸ் குறைவாகவும் இருந்தது.
வடதமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 34-37° செல்சியஸ், தென்தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 31 37° செல்சியஸ் மற்றும் தமிழக கடலோரப் பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 31-35° செல்சியஸ் பதிவாகியுள்ளது" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications