தனிநபர்களின் வானிலை கணிப்பு.. ஊடகங்களுக்கு தமிழக அரசு போட்ட புதிய கட்டுப்பாடு
சென்னை: தனியார் வானிலை ஆய்வாளர்களின் கணிப்புகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத வானிலை அமைப்புகள் மற்றும் வானிலை ஆய்வு என்ற பெயரில் பல்வேறு நபர்கள் சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் வானிலை கணிப்புகளை வெளியிடும் போது கவனத்துடன் செயல்பட வேண்டும் என ஊடகங்களுக்கு தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுரை வழங்கி உள்ளது.
இன்றைய சூழலில் ஆள் ஆளுக்கு இந்த வெதர்மேன், அந்த வெதர்மேன், இந்த நகர வெதர்அப்டேட், அந்த நகர வெதர்அப்டேட், வானிலை நிலவரம் என்று கண்டபடி கணித்து வெளியிடுகிறார்கள். இதில் இரண்டு அல்லது மூன்று தனியார் ஆய்வாளர்கள் மட்டுமே பொறுப்புடன் சரியான முறையில் மக்களை பீதிக்கு உள்ளாக்காமல் வெளியிடுகிறார்கள்.

மற்றவர்கள் வியூஸ் பெறும் நோக்கிலும், லைக்ஸ் பெறும் நோக்கில் தவறான தம்ப்னைல் வைப்பது, டைட்டில் வைப்பது என்று மக்களை தவறாக வழிநடத்துகிறார்கள். சில ஊடகங்களுமே பொறுப்புகளை மறந்து வியூஸ் நோக்கி மக்களை பீதிக்குள்ளாக்கும் வகையில் தலைப்புகளை வைத்து வானிலை குறித்த அறிவிப்புகளை வெளியிடுகின்றன. இதனால் மக்களிடையே குழப்பங்கள் ஏற்படுகிறது.
கடந்த 2024 அல்லது 2025ம் ஆண்டுகளில் மக்களை பீதியிலேயே வைத்திருப்பதற்காக வானிலை தகவல்களை சிலர் பயன்படுத்தினார்கள். சில ஊடகங்களுமே செயல்பட்டன. குறிப்பாக சென்னை குறித்து பரவிய தகவல்கள் குழப்பத்தை ஏற்படுத்தின. இதனால் இந்த ஆண்டு அப்படியான குழப்பங்கள் வரக்கூடாது என்பதற்காகவே தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் ஊடகங்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) என்பது நாட்டின் வானிலை நிலவரங்களைக் கண்காணித்து, புயல், மழைப்பொழிவு, இடியுடன் கூடிய மழை உள்ளிட்ட வானிலை நிகழ்வுகள் தொடர்பான அதிகாரப்பூர்வ முன்னறிவிப்புகள், எச்சரிக்கைகள் மற்றும் அறிவுரைகளை வெளியிடும் அங்கீகரிக்கப்பட்ட தேசிய அமைப்பாகும்.
இந்நிலையில், வானிலை தொடர்பான கணிப்புகளை வெளியிடும் சில தனிநபர்கள், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிடும் அதிகாரப்பூர்வ முன்னறிவிப்புகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட தங்களது சொந்தக் கணிப்புகள் மற்றும் மதிப்பீடுகளை சமூக ஊடகங்கள் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்கள் மூலமாக பரப்பி வருகின்றனர்.
மேலும், இத்தகைய தகவல்களை சில தொலைக்காட்சி சேனல்களும், செய்தி ஊடகங்களும் வெளியிடுவதால் பொதுமக்களிடையே குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது.
வானிலை தொடர்பான அறிவியல் கருத்துகளும், சுயாதீனமான ஆய்வுகளும் வரவேற்கத்தக்கவையே. அதே சமயத்தில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிடும் அதிகாரப்பூர்வ முன்னறிவிப்புகளுக்கும், தனிநபர்களின் சொந்தக் கணிப்புகளுக்கும் இடையிலான வேறுபாட்டை பொதுமக்கள் தெளிவாக அறிந்துகொள்வது அவசியம்.
குறிப்பாக, புயல், கனமழை போன்ற நிகழ்வுகளின் போது, ஒன்றுக்கொன்று முரண்பட்ட வானிலை முன்னறிவிப்புகள் பொதுமக்களிடையே தேவையற்ற அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தும். அத்துடன், அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பேரிடர் கால மீட்பு நடவடிக்கைகளிலும் அது பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
எனவே, தொலைக்காட்சி, அச்சு, இணையதள ஊடகங்கள் ஆகியவை வானிலை தொடர்பான தகவல்களை வெளியிடும்போது பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிடும் அதிகாரப்பூர்வ வானிலை முன்னறிவிப்புகள், எச்சரிக்கைகள் மற்றும் அறிவுரைகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்க வேண்டும். தனிநபர்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத அமைப்புகள் வெளியிடும் வானிலை கணிப்புகளை அரசின் அதிகாரப்பூர்வ முன்னறிவிப்புகளாக கருதவோ, வெளியிடவோ கூடாது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்புகளிலிருந்து மாறுபட்ட தனிநபர்களின் கணிப்புகளை ஒளிபரப்புவதற்கு அல்லது வெளியிடுவதற்கு முன்பு, அவற்றின் நம்பகத்தன்மையை ஊடக நிறுவனங்கள் உரிய முறையில் சரிபார்க்க வேண்டும். சுயாதீனமான அறிவியல் மதிப்பீடுகள் வெளியிடப்படும்போது, அவற்றின் ஆதாரம் தெளிவாகக் குறிப்பிடப்படுவதுடன், அவை இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ முன்னறிவிப்புகள் அல்ல என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.
புயல், கனமழை மற்றும் பேரிடர் காலங்களில் பொதுமக்களிடையே அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தக்கூடிய பரபரப்பான செய்திகள், ஆதாரமற்ற கணிப்புகள், சரிபார்க்கப்படாத தகவல்களை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். வானிலை தொடர்பான தகவல்கள் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் இயல்பு வாழ்க்கையுடன் நேரடியாகத் தொடர்புடையவை. எனவே, இத்தகைய தகவல்களை பொறுப்புடனும், உண்மைத்தன்மையுடனும் வெளியிடுவது அனைத்து ஊடக நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் கடமையாகும்.
பொதுமக்களுக்கு சரியான, நம்பகமான மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் சென்றடைவதை உறுதி செய்ய அனைத்து ஊடக நிறுவனங்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். புயல், கனமழை உள்ளிட்ட வானிலை தொடர்பான அதிகாரப்பூர்வ முன்னறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கைகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் அரசின் சம்பந்தப்பட்ட துறைகள் வெளியிடும் தகவல்களை மட்டுமே பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்" இவ்வாறு தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.




Click it and Unblock the Notifications
