தமிழ்நாடு முழுக்க மிரட்டும் மழை! கோவையில் பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது! மற்ற மாவட்டங்களில் எப்படி?
கோவை: கோவையில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார். நேற்று மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை கொட்டி தீர்த்ததால் பல்வேறு இடங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஆனால் இன்று காலை மழை பெய்யாததால் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதில் இன்று மற்றும் நாளை பல்வேறு இடங்களில் அதி கனமழை பெய்யும் என்று வானிலை மையம் முன்னதாகவே அறிவித்துவிட்டது. இதற்கு ஏற்றார்போலே நேற்று முன்தினம் முதல் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

நேற்று முன்தினம் மதுரை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. தொடர்ந்து விடாமல் பெய்த மழையால் ஒருசில இடங்களில் மழைநீர் தேங்கியது. சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் போலீஸ் வாகனம் சிக்கியது. இதேபோல் ஆட்டோ ஒன்று மழை நீரில் சிக்கிய நிலையில் அதில் இருந்த 3 பேரை போலீசார் பத்திரமாக மீட்டனர். இதேபோல் புதுக்கோட்டையிலும் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.
நேற்று கோவை மற்றும் சேலம் மாவட்டங்களில் கனமழை கொட்டியது. இதனால் நீர்நிலைகளில் உடைப்பு ஏற்பட்டு மழை நீர் வீடுகளுக்குள், குடியிருப்புகளுக்கு புகுந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டது. நேற்று மாலையில் இருந்து நள்ளிரவு வரை கோவையில் மழை பெய்தது. இதனால் இன்றும் மழை பெய்யும் வாய்ப்பு இருக்கும் என்று பள்ளி மாணவர்கள் விடுமுறை விடப்படும் என்று எதிர்பார்த்து இருந்தனர்.
ஆனால் நள்ளிரவுக்கு பிறகு கோவையில் மழை குறைந்தது. இன்று காலை மழை பெய்யாததால் கோவையில் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என்று மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் அறிவித்துள்ளார். நேற்று கோவையில் பெய்த கனமழையை பார்த்ததும் நாளைக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வரும் என்று மாணவர்கள் நினைத்திருந்தனர். ஏனென்றால் மழை அந்த அளவுக்கு விடாமல் வெளுத்து வாங்கியது.
கனமழை பெய்து மக்கள் வாழ்க்கை முடங்கினாலே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படும் என்று நேற்று பெய்த மழையை பார்த்து மக்கள் நினைத்திருந்தனர். ஆனால் இன்று நிலைமை அடியோடு மாறியதால் மாவட்ட ஆட்சியர் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என்று தெரிவித்துள்ளார். இன்று மழை பெய்யாததாலும், மக்கள் வாழ்க்கை சீராக இருப்பதனாலும் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், அதிகனமழை அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படும் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நினைத்திருந்தனர். ஆனால் இதுவரை தமிழக அரசு சார்பில், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை.
முன்னதாக வானிலை மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பில், தமிழகத்தின் மத்திய மாவட்டங்களில் இன்று மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. குறிப்பாக கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.
இதேபோன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு இருந்தது. இதன் காரணமாகவும், நேற்று நள்ளிரவு முதல் காலை வரை மழை பெய்ததாலும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என மாணவர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் இதுவரை தமிழக அரசு சார்பில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை.












Click it and Unblock the Notifications