நீலகிரியை சுத்துப்போட்ட கரு மேகங்கள்! கனமழை காரணமாக உதகை, குந்தாவில் இன்று பள்ளிகளுக்கு லீவு
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனையடுத்து உதகை, குந்தாவில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஜூலை முதல் வாரம் வரை தமிழகத்தில் வெயில் வாட்டி எடுத்த நிலையில், தற்போது பருவமழை தீவிரமடைய தொடங்கியுள்ளது. எனவே வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. தென்மேற்கு பருவமழை மத்திய இந்தியா வரை உள்ள நிலப்பரப்புக்கு ஆண்டின் மொத்த மழைப்பொழிவில் 70%ஐ கொடுக்கும். எனவே இதனை நம்பி கோடிக்கணக்கான விவசாயிகள் இருக்கின்றனர்.

தமிழ்நாட்டை பொறுத்த வரை கடந்த ஜூன் 1ம் தேதி தொடங்கி இன்று வரை 64% கூடுதலாக மழை பொழிவை தென்மேற்கு பருவமழை கொடுத்திருக்கிறது. இந்த காலங்களில் ஒட்டுமொத்தமாக சராசரியாக 105.9 மி.மீதான் மழை பொழிந்திருக்க வேண்டும். ஆனால் சராசரியாக 173.3 மி.மீ மழை பெய்திருக்கிறது. அதிகபட்சமாக நீலகிரியில் 794.2 மி.மீ, கோவையில் 558 மி.மீ என மழை பெய்திருக்கிறது. குறைந்தபட்சமாக தூத்துக்குடியில் 7.5 மி.மீ, நாகப்பட்டினத்தில் 47.9 மி.மீ என மழை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட தலா -49, -33 சதவிகிதம் குறைவாகும்.
அதேபோல அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் லேசானது முதல் மிதமானது வர மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. கடந்த சில நாட்களில் என்னதான் மழை இயல்பை விட அதிகமாக பெய்திருந்தாலும் தென் மாவட்டங்களில் உள்ள அணைகளின் நீர்மட்டம் மட்டுமே அதிகரித்து வந்தன. உள் தமிழக மாவட்டங்களில் குறிப்பாக சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் நீர் மட்டம் போதுமான அளவுக்கு உயராமல் இருந்தது. ஆனால் தற்போது கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணையின் நீர் மட்டம் உயர்ந்திருக்கிறது.
கர்நாடகாவின் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. எனவே அங்கிருந்து மேட்டூருக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கர்நாடகாவிலிருந்து மேட்டூருக்கு 28,856 கனஅடி நீர் வந்துக்கொண்டிருக்கிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 300 நாட்களுக்கு பிறகு 90 கனஅடியை கடந்திருக்கிறது. தற்போது அணையில் 52.662 டிஎம்சி தண்ணீர் இருப்பு இருக்கிறது. குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கனஅடி நீர் திறக்கப்பட்டிருக்கிறது.
இப்படி இருக்கையில் இன்று தமிழ்நாட்டில் கோவை மற்றும் நீலகிரி மாவட்ட மலை பகுதிகளில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதேபோல சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில், "மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை (ஜூலை 26) முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், வலுவான தரைக்காற்று 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். இதில், ஜூலை 26-இல் நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மழை அளவு (மில்லி மீட்டரில்): தமிழகத்தில் வியாழக்கிழமை காலை வரை அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 140 மி.மீ. மழை பதிவானது. மேல் பவானி (நீலகிரி) , கிளன்மாா்கன் (நீலகிரி) - தலா 60, குந்தா பாலம் (நீலகிரி) - 50" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கனமழை அறிவிப்பு காரணமாக இன்று நீலகிரியின் உதகை மற்றும் குந்தா தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications