நிற்காமல் கொட்டுதே மழை.. இன்று கிளைமேட் எப்படி? சொந்த ஊரில் இருந்து திரும்புவோருக்கு புதிய அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. மாநிலத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி இருக்கிறது. இதற்கிடையே இன்றும் நாளையும் கனமழை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இன்று தென்தமிழக பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இப்போது வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமாக உள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாகக் கொட்டாரம் (கன்னியாகுமரி) 160 மிமீ மழை பெய்துள்ளது. கீழ் கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), குன்னூர் PTO (நீலகிரி), கோத்தகிரி (நீலகிரி), அழகரை எஸ்டேட் (நீலகிரி) தலா 140 மிமீ மழை பெய்துள்ளது. மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் கடந்த 24 மணி நேரத்தில் நல்ல மழை பெய்துள்ளது.
வானிலை மையம்: வரும் நாட்களில் நிலவும் வானிலை குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தென் கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
மக்களே கவனம்: இதனால் இன்று தென்தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வடதமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் நவ. 5, 6 தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேபோல நவ. 7ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நவ. 8, 9 தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகளில் வரும் நவ. 7ம் தேதி வடதமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். வங்கக்கடல் பகுதிகளில் இன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
நவ. 6ம் தேதி தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நவ. 7ம் தேதி தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அரபிக்கடல் பகுதிகளில் எச்சரிக்கை ஏதுமில்லை" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications