விளாசிய மிக்ஜாம் புயல்! சென்னையில் கொட்டிய மழை! நாடு முழுக்க 1000+ விமான சேவை பாதிப்பு! என்ன நடந்தது
சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக நேற்று நாள் முழுக்க சென்னை விமான நிலையம் மூடப்பட்ட நிலையில், நேற்று ஒரே நாளில் சுமார் 1000 விமானச் சேவை இதனால் பாதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக இரண்டு நாட்களாகச் சென்னையில் கனமழை கொட்டி தீர்த்தது. நேற்று முன்தினம் ஆரம்பித்த இந்த கனமழை நேற்றிரவு வரை கொட்டி தீர்த்தது. இதனால் சென்னையில் நகர் முழுக்க மழை நீர் தேங்கியது.

நேற்று முழுக்க மழை நீர் வடியாத நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இன்றும் கூட முக்கிய சாலைகளில் மட்டுமே மழை நீர் வடிந்துள்ள நிலையில், மற்ற பகுதிகளில் இன்னும் மழை நீர் வடியவில்லை. அதற்கான பணிகளைச் சென்னை மாநகராட்சி எடுத்து வருகிறது.
1000+ விமானங்கள்: முன்னதாக இந்த கனமழை காரணமாக நேற்றைய தினம் சென்னையில் நகர் முழுவதும் விமானச் சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக இப்போது சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கிடையே இந்த மிக்ஜாம் புயல் காரணமாகக் கனமழை காரணமாக நாடு முழுக்க சுமார் 1000+ விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கனமழை காரணமாகச் சென்னை விமான நிலையம் முற்றிலுமாக மூடப்பட்ட நிலையில், இண்டிகோ விமானம் மட்டும் நாடு முழுக்க இதனால் 550 விமானங்களை ரத்து செய்துள்ளது. அதேபோல விஸ்தாரா நிறுவனம் சென்னையில் மட்டும் 10+ விமானங்களை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் கனமழையால் நேற்று 33 விமானங்களை ரத்து செய்திருந்தது. அதேபோல இன்றும் சுமார் 20 விமானங்களை ரத்து செய்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது
சென்னை ஏர்போர்ட்: சென்னை விமான நிலையத்திற்குள் வெள்ள நீர் புகுந்ததையடுத்து சென்னை விமான நிலையம் நேற்று மூடப்பட்டது. முதலில் காலை 9.30 மணி முதல் காலை 11.30 வரை ஏர்போர்ட் மூடப்பட்டிருந்தது. இருப்பினும், மழை கொட்டியதால் விமான நிலையத்தில் தண்ணீர் அதிகம் தேங்கி இருந்ததால் நேற்று நாள் முழுக்க விமானச் சேவை ரத்து செய்யப்பட்டது.
இந்தப் புயல் இப்போது ஆந்திரா நோக்கி நகர்ந்துள்ள நிலையில், இன்று காலை முதல் ஏர்போர்ட் செயல்படத் தொடங்கியது. சுமார் 20 மணி நேரம் கழித்து முதல் விமானம் சென்னையில் தரையிறங்கியது. சென்னையில் தேங்கி இருந்த மழை நீர் அனைத்தும் அகற்றப்பட்ட நிலையில் மும்பையில் இருந்த வந்த விமானம் சென்னையில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.
மீண்டும் தொடங்கிய விமானச் சேவை: இண்டிகோ நிறுவனம் இன்று நண்பகல் முதல் சென்னையில் விமானச் சேவையை ஆரம்பித்துள்ளது. முன்னதாக இன்று காலை 60 விமானங்களை இண்டிகோ ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல விஸ்தாரா நிறுவனமும் தனது விமானச் சேவையை மீண்டும் தொடங்கியுள்ளது.
விமானங்கள் கேன்சல் செய்யப்பட்ட நிலையில், பயணிகள் தேவைப்பட்டால் டிக்கெட்டை ரத்து செய்யலாம் அல்லது இலவசமாக மாற்றியமைத்துக் கொள்ளலாம் என்று விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இப்போது சென்னையில் விமானச் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ள நிலையில், விமான நிறுவனங்கள் வழக்கம் போல தங்கள் சேவையைத் தொடங்கியுள்ளன. இருப்பினும், மழை பாதிப்பு இருப்பதால் பலரும் தங்கள் டிக்கெட்களை கேன்சல் செய்தே வருகின்றனர்.












Click it and Unblock the Notifications