ஆரம்பிச்சாச்சு மழை! இனி சென்னையில் குளுகுளு கிளைமேட் தான்! மழை எவ்வளவு நாள் தொடரும்? வெதர்மேன் நறுக்
சென்னை: சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே வெப்பம் அதிகமாகவே இருந்தது. இதனால் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வந்தனர். இதற்கிடையே இன்று மாலை தொடங்கி சென்னையில் திடீர் மழை பெய்யும் என்று வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார். மேலும், வானிலை மையமும் கூட சென்னையில் இன்று மாலை இடி மின்னலுடன் மழை பெய்யும் என்றே எச்சரித்துள்ளது.
சென்னை உட்பட வடமாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே வெப்பம் அதிகமாகவே இருந்தது. ஜூன் மாதமே எதிர்பார்த்த அளவுக்கு மழை இல்லாத நிலையில், இந்த மாதம் மழை இருக்கும் என்றே மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், வழக்கத்திற்கு மாறாக இந்த மாதம் மழை இல்லை. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர்.

சென்னை கிளைமேட்
குறிப்பாக நேற்றைய தினம் சென்னையில் வெப்பம் அதிகமாகவே இருந்தது. ஆனால், இன்று கிளைமேட் மெல்ல மாறி வருகிறது. இன்று மாலை சென்னையில் நல்ல மழை பெய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் வடபழனி, கோடம்பாக்கம், கேகே நகர், வளசரவாக்கம், நெசப்பாக்கம், பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.
ஆரம்பித்த மழை
அதேபோல சென்னை புறநகர்ப் பகுதிகளான பூந்தமல்லி, குன்றத்தூர், குமணன் சாவடி, திருவேற்காடு, போரூர், அய்யப்பன்தாங்கல், வளசரவாக்கம், ராமாபுரம், மதுரவாயல் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக நிலவி வந்த அனல் குறையும் என்றும் குளுகுளு கிளைமேட் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு வெதர்மேன்
சென்னையில் இன்று திடீர் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்ற தலைப்பில் வெதர்மேன் பிரதீப் ஜான் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பலத்த காற்று வீசுவதால், கடல் காற்று நகரத்திற்குள் வர முடியாமல் போனது. இதனால் சென்னையில் வெப்பமான நாளாக உள்ளது. நேற்று இரவு 8 மணிக்கு வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாக இருந்தது, கடல் காற்று நகரத்திற்குள் வரவில்லை என்பதைக் காட்டுகிறது.
ஆனால், இன்று கடல் காற்று வடக்குப் பக்கத்தில் நகரத்திற்குள் வரத் தொடங்கியுள்ளது.. மேலும் நிறைய மழை மேகங்கள் உருவாகி உள்ளன. இந்த மழை மேகங்கள் கடல் காற்றுடன் தொடர்பை ஏற்படுத்தி ஈரப்பதத்தைக் கொண்டு வருவதால், மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று வெப்பம் அதிகமாக இருந்தது. ஆனால், வரும் நாட்களில் சென்னையில் வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸில் இருந்து 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை வானிலை மையம்
அதேபோல சென்னை வானிலை ஆய்வு மையமும் கூட இன்று மாலை 7 மணி வரை சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றே கணித்துள்ளது. அதாவது அடுத்த 2 மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியிருக்கிறது.
அதேபோல நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, வேலூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, திண்டுக்கல் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. சரியாக வேலையை விட்டுக் கிளம்பும் நேரத்தில் மழை ஆரம்பித்துள்ளதால் மக்கள் அதற்கேற்பத் தங்கள் பயணங்களைத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.












Click it and Unblock the Notifications