அக்னி வெயிலை தூக்கி சாப்பிட்ட வளிமண்டல மேலடுக்கு சுழற்சி.. அடுத்த ஒரு வாரம் வானிலை நிலவரம் இதுதான்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த ஒரு வாரத்திற்கு வெயில் தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் வானிலை அறிவிப்பில், "தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதிகளில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது. புதுவையில் வறண்ட வானிலை நிலவியது.

வெப்பநிலை நிலவரம்
அதிகபட்ச வெப்பநிலையை பொறுத்தவரை ஈரோட்டில் 39.8° செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலை (சமவெளிப்பகுதிகளில்) திருத்தணியில் 19.6° செல்சியஸும் பதிவாகியிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3" செல்சியஸ் குறைந்துள்ளது. ஏனைய தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றம் ஏதுமில்லை.
தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் 2° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை ஒட்டியும் இருந்தது. தமிழக உள் மாவட்டங்கள் சமவெளி பகுதிகளில் 36-39° செல்சியஸ், வட தமிழக கடலோர பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 33-37° செல்சியஸ், தென் தமிழக கடலோர பகுதிகளில் 32-34° செல்சியஸ், மலைப்பகுதிகளில் 19-27° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு பருவமழை அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகின்ற 13-ஆம் தேதி வாக்கில் துவங்கக்கூடும். எனவே,
இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மே.9ம் தேதி தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மே.10 மற்றும் 11ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மே.12 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மே.13 மற்றும் 14ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கை பொறுத்தவரை, இன்று மற்றும் நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. மே.10 மற்றும் 11ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.
இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:
இன்றும் நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3" செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
மே.10 மற்றும் மே.11 தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
இன்றும் நாளையும் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் வெப்பம் சார்ந்த அசெளகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று (08-05-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (09-05-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகளில் இன்று தொடங்கி 11ம் தேதி எச்சரிக்கை ஏதுமில்லை. மே.12ம் தேதி தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். வங்கக்கடல் பகுதிகள் & அரபிக்கடல் பகுதிகளில் இன்று தொடங்கி மே.12ம் தேதி வரை எச்சரிக்கை ஏதுமில்லை.












Click it and Unblock the Notifications