ஒரே நேரத்தில் 3 காற்றழுத்த சுழற்சிகள்! அடுத்த 3 நாட்களுக்கு மழை வெளுக்கும்.. வெதர்மேன் எச்சரிக்கை!
சென்னை: ஒரே நேரத்தில் மூன்று சுழற்சிகள் பகுதிகள் உருவாகி இருப்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். குறிப்பாகத் தென் மற்றும் மேற்கு தமிழக மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்றும், சென்னையிலும் பகல் நேரத்தில் திடீர் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
வங்கக்கடலில் இப்போது உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி புயலாக மாறுமா என்பதே இப்போது மக்கள் பலரின் அச்சமாக இருக்கிறது. ஏற்கனவே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய மழை வெளுக்கும் நிலையில், புயலாக மாறினால் மழை மேலும் அதிகரிக்கும் என மக்கள் அச்சமடைகிறார்கள். இதற்கிடையே மழை தொடர்பாக வெதர்மேன் மேலும் சில தகவல்களை குறிப்பிட்டுள்ளார்.

ஹாட்ஸ்பாட்
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "இன்றைய தினம் தென்தமிழகம் மற்றும் மேற்கு தமிழகம் முக்கிய ஹாட்ஸ்பாட்களாக இருக்கும். பல மாவட்டங்களில் மிக தீவிர கனமழை கொட்டும். மன்னார் வளைகுடா பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும். விருதுநகர், மதுரை, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட பிற தென் மாவட்டங்களிலும் நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.
மேற்கு தமிழகத்தை பொறுத்தவரை திண்டுக்கல், கோவை, திருப்பூர், நீலகிரி, கரூர் மற்றும் அவற்றை ஒட்டிய மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள வானிலை அமைப்பு நாளை அரபிக்கடலை நோக்கி நகரும்போது இந்த பகுதிகளிலும் மழை கிடைக்கலாம்.
தமிழகத்தின் உள் மாவட்டங்கள் முதல் கடலோர பகுதிகள் வரை மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும். குறிப்பாக குன்னூர், மாஞ்சோலை மலை பகுதிகளில் மிக அதிக மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும்.
மழை கொட்டும்
சென்னை, வேலூர், ராணிப்பேட்டை மற்றும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.. மன்னார் வளைகுடா பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவும்போது, கிழக்குக் காற்றின் மூலம் மழை மேகங்கள் உள் மாவட்டங்களுக்குள் நகரக்கூடும். இதனால் சென்னையில் பகல் நேரத்தில்கூட திடீரெனக் குறுகிய நேரத்தில் கனமழை பெய்யலாம்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
மற்றொரு ட்வீட்டில் அக்டோபர் 23 முதல் 25ஆம் தேதி வரை வட தமிழக மாவட்டங்கள் உள்ளிட்ட உள் மாவட்டங்களிலும் மழை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் ஏற்படும் மாற்றங்களால் சென்னை உள்ளிட்ட வட தமிழகப் பகுதிகளிலும் நல்ல மழை கிடைக்கலாம் என்றும் அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.
மூன்று சுழற்சிகள்
இதற்கிடையே வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி 'அர்னாப்' புயலாக மாறுமா என்பது குறித்தும் பிரதீப் ஜான் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக புதிய தலைமுறைக்கு அவர் அளித்த பேட்டியில், வங்கக்கடலில் உருவாகியுள்ள வானிலை அமைப்பு தற்போது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உள்ளதாக குறிப்பிட்டார். மேலும், இப்போது வங்கக்கடலில் மூன்று சுழற்சிகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த அமைப்பு நிலப்பரப்பிற்கு மிக அருகில் இருப்பதால் தீவிரமடைவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாகவும், அதே நேரத்தில் அந்தமான் தீவுகளுக்கு அருகே நிலவும் மற்றொரு காற்றழுத்த பகுதிக்கு வலுவடைய கூடுதல் கால அவகாசம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும், "அந்த அமைப்பு வடக்கு நோக்கி நகரும்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறலாம். காற்றின் வேகம் 35 நாட்ஸ் அளவை எட்டினால் புயலாக மாறும்.
மழை இருக்கு
ஒரு வானிலை அமைப்பு தீவிரமடைந்து வலுவான புயலாக மாறினால், மேலடுக்கில் நிலவும் உயர் அழுத்த காற்றின் காரணமாக அது வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் நகரக்கூடும். அப்படியானால் தமிழகத்திற்கு நேரடி பாதிப்போ, பெரிய அளவிலான மழையோ இருக்காது. மாறாக, அந்த அமைப்பு வலுவடையாமல் காற்றழுத்த தாழ்வு பகுதியாகவோ அல்லது தாழ்வு மண்டலமாகவோ நீடித்தால், கிழக்குக் காற்றின் உந்துதலால் மழை மேகங்கள் தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்புள்ளது. குறிப்பாக அப்போது தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழகக் கடலோர பகுதிகளை நோக்கி மேகங்கள் வந்தால் வட தமிழகத்திற்கு நல்ல மழை கிடைக்கலாம்" என்றும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
