4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. விடாமல் வெளுக்க போகுது மழை.. வானிலை மையம் எச்சரிக்கை!
சென்னை: வளிமண்டல சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை கொட்டி வருகிறது. இன்றும் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதேபோல் நெல்லை, தென்காசி, சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கடலோர கர்நாடகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் சுமார் 3.1 கி.மீ. முதல் 4.5 கி.மீ. உயரம் வரை வளிமண்டல சுழற்சி நிலவுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும், தென்மேற்கு பருவமழை தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், மத்திய மேற்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகள், லட்சத்தீவு, கேரளா, கர்நாடகம், தமிழகத்தின் சில பகுதிகள் மற்றும் தென்கிழக்கு, மத்திய மற்றும் வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலும் முன்னேறியுள்ளது.

இதன் தாக்கத்தால், இன்று கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழை (ஆரஞ்சு நிற எச்சரிக்கை) பெய்யக்கூடும். அதேபோல் தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பூர், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (ஜூன் 7) கோவை மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும். மேலும் தென்காசி, திருநெல்வேலி மலைப்பகுதிகள், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி ஃபாரன்ஹீட்டை ஒட்டி பதிவாகும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications